பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியா..? மோடியைப் பற்றி மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்ன ஆச்சரிய தகவல்.!

By Asianet TamilFirst Published Oct 10, 2021, 8:31 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடியை சர்வாதிகாரி என்று விமர்சிப்பவர்களுக்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா பதில் கூறியுள்ளார். 
 

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும்போது, ‘சர்வாதிகாரி’ என்ற பதத்தை அடிக்கடிப் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் இவ்வாறு விமர்சனம் செய்பவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அரசு தொடங்கிய சன்சாத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்தப் பேட்டியில், “எங்களை சர்வாதிகாரி என்று சிலர் குற்றம் சாட்டுவது நியாயம் அற்றவை. கருத்துக்களுக்கு காது கொடுப்பதில் மோடி போன்று ஒருவரை நான் கண்டதில்லை. 
ஏதாவது பிரச்னை பற்றிய கூட்டம் என்றால், மோடி குறைவாகவே  பேசுவார். பிறர் பேசுவதை கவனமாகக் கேட்டு கொண்ட பிறகே முடிவெடுப்பார். ஒரு விஷயத்தில் யோசிப்பதற்கு அப்படி என்ன இருக்கிறது என்றுகூட நாங்கள் நினைப்போம். ஆனால், மோடி இரண்டு, மூன்று கூட்டங்களை நடத்தி முடித்தப் பிறகே பொறுமையாக இறுதி முடிவை எடுப்பார். எப்போதுமே ஒரு நபரின் பரிந்துரை தரமாக உள்ளதா என்றுதான் மோடி பார்ப்பார். அந்த நபர் யார் என்பதற்கெல்லாம் முக்கியத்துவம் தரமாட்டார். எனவே, முடிவுகளை அவர் திணிக்கிறார் என்று சொல்வதில் துளி உண்மையும் இல்லை. 
அவருடன் பணியாற்றும் எதிர்க்கட்சியினர்கூட இப்போது இருப்பது போன்ற ஜனநாயக முறை முன் எப்போதும் செயல்பட்டதில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள். விவசாயிகளுக்கு உதவுவதற்காகவே பாஜக அரசு பெரும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் 11 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு 6,000 ரூபாயை பெறுகிறார்கள். ஓராண்டில் ரூ.1.5 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.” என்று அமித்ஷா தெரிவித்தார். 

click me!