அடுத்தஆண்டு தேர்தல்.. 4 மாநிலங்களில் பாஜக அசுர பலம்.. காங்கிரஸை கரைக்கும் ஆம்ஆத்மி.. கருத்துக்கணிப்பில் தகவல்!

By Asianet TamilFirst Published Oct 10, 2021, 7:14 AM IST
Highlights

வட இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியே அமையும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 
 

அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட், குஜராத்  ஆகிய 6 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மற்ற 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது பற்றி ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளன. அதன் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேசம்
 


 நாட்டின் அதிம வாக்காளர்களைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 41.3 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. சமாஜ்வாதி கட்சி 32 சதவீதமும், பகுஜன் சமாஜ் கட்சி 15 சதவீதமும், காங்கிரஸ் 6 சதவீதமும், எஞ்சியவர்கள் 6 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் எனக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.  மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 241 - 249 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளது. சமாஜ்வாடி கட்சி 130 - 138 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 15 -19 தொகுதிகளையும், காங்கிரஸ் 3 - 7 தொகுதிகளையும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
 

உத்தரகாண்ட்


உத்தரகாண்ட்டில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்கு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 45 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் 34 சதவீதமும், ஆம் ஆத்மி 15 சதவீதமும், மற்றவர்கள் 6 சதவீத வாக்குகளையும் பெறக்கூடும். மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 42 - 46 தொகுதிகளையும், காங்கிரஸ் 21 - 25 இடங்களையும், ஆம் ஆத்மி 0 - 4 இடங்களையும் மற்றவர்கள் 0 - 2 இடங்களையும் வெல்லும் வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


மணிப்பூர்


வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற உள்ள தேர்தலில் பாஜக 36 சதவீத வாக்குகளைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 34 சதவீதமும், நாகா மக்கள் முன்னணி 9 சதவீதமும், மற்றவர்கள் 21 சதவீதமும் பெறலாம். மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 21 - 25 இடங்களையும், காங்கிரஸ் 18 - 22 இடங்களையும், நாகா மக்கள் முன்னணி 4 - 8 இடங்களையும் மற்றவர்கள் 1 - 5 இடங்களையும் வெல்லக்கூடும். நூலிழையில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறினாலும் இழுபறி உருவாகும் நிலையும் ஏற்படலாம் என கருத்துக்கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது.


கோவா


கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 38 சதவீதம், காங்கிரஸ் 18 சதவீதம், ஆம் ஆத்மி 23 சதவீதம், மற்றவர்கள் 21 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும்.  மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 24 - 28, காங்கிரஸ் 1 - 5, ஆம் ஆத்மி 3 - 7, மற்றவர்கள் 4 - 8 தொகுதிகளில் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 
இந்த நான்கு மாநிலங்களிலும் தற்போதைய நிலையில் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை இழந்து வரும் வேளையில், ஆம் ஆத்மி வட மாநிலங்களில் செல்வாக்கை அதிகரித்துள்ளது கருத்துக்கணிப்பில் தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை அக்கட்சி கரைத்து வருகிறது. 

click me!