சத்ரபதி சிவாஜிக்கு எதிராக சர்ச்சைக்குரிய மற்றும் அவதூறான கருத்துகளை தெரிவித்து இருந்த மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவியில் இருந்து தானாக முன்வந்து ராஜினாமா செய்வார் அல்லது நீக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
தானாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்வதற்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி விருப்பம் தெரிவித்து இருப்பதாக மகாராஷ்டிரா பாஜக தலைவர் ஒருவர் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்து இருக்கிறார். தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு அவரே நாட்டின் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
''பாஜக மூத்த தலைவர்களுடனான தனிப்பட்ட சந்திப்பில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவி விலக விருப்பம் தெரிவித்து இருக்கிறார். சமுதாயத்தில் வேறு வேறு தரப்பில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதால், அவர் இனி ஆளுநர் பதவியில் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை. இதுகுறித்து இறுதியாகவும், அதிகாரப்பூர்வமாகவும் தெரிவிக்கப்படும்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கோஷ்யாரி பதவி விலகுகிறார் என்ற தகவலை ஆளுநர் அலுவலகம் மறுத்துள்ளது. கோஷ்யாரி ஆளுநர் பதவியில் இருந்து விலகும் முடிவை சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வரவேற்றுள்ளது. பதவி விலக கவர்னர் விருப்பம் தெரிவித்தது நல்ல விஷயம் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். "சத்ரபதி சிவாஜி பற்றி கோஷ்யாரி அளித்து இருந்த கருத்துக்கு எதிராக நாங்கள் மாநிலத்தில் பந்த்துக்கு அழைப்பு விடுத்து இருந்தோம். அதன் விளைவுதான் இது'' என்று உத்தவ் தாக்கரே அணியினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் இரண்டு நாட்கள் கோஷ்யாரி தங்கி இருந்ததாகவும் அப்போதுதான், ராஜினாமா செய்யும் தன்னுடைய விருப்பத்தை பாஜக தலைவர்களிடம் தெரிவித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது மகாராஷ்டிர ஆளுநரை நீக்குவது சரியான முடிவாக இருக்குமா அல்லது எதிர்க்கட்சிகளுக்கு பயன் அளிக்குமா என்பது குறித்து மக்களின் மனநிலையை அறிய பாஜக திட்டமிட்டு இருப்பதாகவும், குஜராத் சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர்தான் முடிவு தெரிய வரும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி நவம்பர் 18 ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு உரையின் போது, சத்ரபதி சிவாஜி பண்டைய காலத்தின் அடையாளம் என்றும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நவீன கால அடையாளம் என்றும் சர்ச்சையை கிளப்பினார்.
இதற்கு முன்பும் சர்ச்சைக்குரிய வகையில் கோஷ்யாரி பேசி இருந்தார். ஜூலை 29 ஆம் தேதி, குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி சமூகத்தைச் சேர்ந்தவர்களை மகாராஷ்டிராவில் இருந்து நீக்கிவிட்டால், மும்பை மற்றும் தானே நகரங்கள் பணமில்லாமல், நிதி நகரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடும் என்று தெரிவித்து இருந்தார்.
இதுமட்டுமின்றி கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, 19 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதிகளான சாவித்திரிபாய் மற்றும் ஜோதிராவ் பூலே ஆகியோரை விமர்சித்து இருந்தார். இவர்கள் இருவரும் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டதற்காக கிண்டல் செய்து இருந்தார். சாவித்ரிபாய்க்கு பத்து வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவரது கணவருக்கு (ஜோதிராவ்) அப்போது 13 வயது. இப்போது கற்பனை செய்து பாருங்கள், திருமணத்திற்குப் பிறகு பையனும் பெண்ணும் என்ன செய்திருப்பார்கள்? அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்?” என்று தெரிவித்து இருந்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.