கட்சிக்குள் இருந்து கொண்டே கலகம் செய்கிறாரா சசி தரூர்? காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

சசி தரூர் சமீப காலமாக பாஜகவையும் பிரதமர் மோடியையும் புகழ்ந்து வருகிறார். உக்ரைன் விவகாரம், கோவிட்-19 தடுப்பூசி திட்டம் ஆகியவற்றில் மத்திய அரசின் நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Shashi Tharoor: கேரளாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அறியப்பட்ட தலைவர் சசி தரூர். கேரளாவில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் இவர், கடந்த முறை நடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே திருவனந்தபுரத்தில் இருந்து வெற்றி பெற முடிந்தது. இந்த நிலையில், கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பாஜகவையும், பிரதமர் மோடியையும் புகழ்ந்து வருகிறார். 

உக்ரைன் விஷயத்தில் மோடியை புகழும் சசி தரூர்:
முதலாவதாக, இந்திய அரசாங்கத்தின் உக்ரைன்-ரஷ்யா கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த சசி தரூர், தற்போது தனக்கு அவமானமாக இருக்கிறது என்று கூறி இருந்தார். 2022 ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியபோது இந்தியாவின் நடுநிலை நிலைப்பாட்டை எதிர்த்ததற்காக தற்போது அவமானப்படுவதாக சசி தரூர் ஒப்புக்கொண்டுள்ளார். செவ்வாயன்று புதுடெல்லியில் நடந்த ரைசினா உரையாடலில் 'சமாதானத்தை ஏற்படுத்துதல்: எதிர்காலத்தைப் பின்னோக்கிப் பார்ப்பது' என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வின் போது பேசிய திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர் இந்தியாவின் அணுகுமுறை நீடித்த அமைதியை வளர்ப்பதற்கு பங்களிக்கும் வகையில் தனித்துவமாக நிலைநிறுத்தியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டார். 

Latest Videos

சசி தரூர் நாடாளுமன்றத்தில் விவாதம் 
"பிப்ரவரி 2022 இல், நாடாளுமன்ற விவாதத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உண்மையில் விமர்சித்த ஒரு நபர் நான் என்பதால், நான் இன்னும் என் முகத்தில் இருந்து முட்டையைத் துடைத்துக் கொண்டிருக்கிறேன்," என்று தரூர் தன்னைப் பற்றி கூறியுள்ளார். அதே நேரத்தில், அவர் ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கண்டித்திருந்தார். மேலும் ஐ.நா. சாசனம் மற்றும் உக்ரைனின் இறையாண்மையை மீறியதற்காக இந்தியா ஆக்கிரமிப்பைக் கண்டித்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை பாராட்டிய சசி தரூர் 
இரண்டாவது, வரிகள் குறித்த அமெரிக்க - இந்திய பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​மத்திய அரசு தனது வழக்கை வலுவாக முன்வைத்து வருவதாக தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து, கோவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவின் தடுப்பூசி மைத்ரி திட்டத்தை சசி தரூர் வெகுவாக பாராட்டி இருந்தார். அவர் தனது பேச்சில், ''தடுப்பூசி மைத்ரி திட்டம் உலக அரங்கில் இந்தியாவின் சக்தியை மேம்படுத்தியதுடன் உலகளாவிய சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்தியது. செய்ய முடியும் என்று நம்பிய நாடுகளால் செய்ய முடியவில்லை. ஆனால், இந்தியா சாதித்து இருந்தது. இந்த தடுப்பூசியை ஏற்றுமதி செய்ததன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் பார்வை மேம்பட்டு இருந்தது'' என்று சசி தரூர் பாராட்டி இருந்தார். பிரதமரின் பெயரை தனது பேச்சில் குறிப்பிடாவிட்டாலும், மோடியின் தலைமையிலான மத்திய அரசின் இந்த திட்டத்தை சசி தரூர் வெகுவாக பாராட்டினார்.

காங். கட்சியில் மரியாதை இல்லை; ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசிய சசி தரூர்!

சசி தரூர் நிலைப்பாடு என்ன?
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், சசி தரூர் இவ்வாறு பாராட்டி இருப்பது, காங்கிரஸ் கட்சியினரை குழப்பமடையச் செய்துள்ளது. சசி தரூர் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று சிந்திக்க வைத்திருக்கிறது. 

ராகுல் காந்தி எச்சரிக்கை 
சசி தரூர் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவதை எந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களும் நேரடியாக கட்டுப்படுத்தவில்லை, கண்டிக்கவில்லை. மேலும், சமீபத்தில் கேரளாவில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கூட, சசி தரூரின் பெயரைக் குறிப்பிடாமல், யாரும் எல்லை தாண்டி பேசக் கூடாது என்று தெரிவித்து இருந்தார்.

கேரளா தேர்தல் ராகுல் காந்தி, பிரியங்காவுக்கு சவாலா?
கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. முன்பு வயநாடு எம்பியாக ராகுல் காந்தி இருந்தார். தற்போது வயநாடு எம்பியாக அவரது சகோதரி பிரிங்கா காந்தி இருக்கிறார். எனவே, கேரளாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது காங்கிரசுக்கு சவாலாகவும், கவுரப் பிரச்சனையாகவும் மாறியுள்ளது. 

தனித்து போட்டியிடுவாரா சசி தரூர்?
கேரளாவில் வெற்றி பெறுவதை இலக்காக வைத்து காங்கிரஸ் செயல்பட்டு வருவதால், சசி தரூரின் பேச்சையும் பொருட்படுத்தாமல், விவாதம் செய்யாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தரூர் தற்போது காங்கிரசுக்கு அப்பாற்பட்ட ஒரு அடையாளத்தை உருவாக்கி வருவதாகவே தெரிகிறது. அடுத்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து காங்கிரஸ் அவருக்கு டிக்கெட் மறுத்தாலும், சுயேச்சையாக போட்டியிட அவருக்கு ஒரு வாய்ப்பாக அமையும். அப்போது, பாஜக அல்லது இடதுசாரி அவருக்கு ஆதரவு கொடுக்கலாம். 

கேரளாவில் காங்கிரஸ் தலைமைக்கு வெற்றிடம் 
முன்னதாக, கடந்த மாதம் பேட்டியளித்து இருந்த சசி தரூர், ''கேரளாவில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்கிறது. கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு பொருத்தமான தலைவர் இல்லை. இடைவெளி ஏற்பட்டுள்ளது. கட்சி தன்னை அங்கீகரிக்கவில்லை என்றால், தன்னுடைய சர்வீஸ் தேவையில்லை என்றால், தனக்கு வேறு வாய்ப்பு தெரியவில்லை'' என்று தெரிவித்து இருந்தார்.

அடுத்தாண்டு நடைபெறும் கேரளா சட்டசபை தேர்தலில் பாஜகவின் கோவிட் உள்பட பல்வேறு திட்டங்களையும் விமர்சிக்க காங்கிரஸ் காத்திருக்கும்போது, சசி தரூர் பாஜக புராணம் கட்சிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

click me!