ஒரே தேதியில் தேர்வுகள் வருவதை நவீன காலத்தில் தவிர்க்க இயலாதா? சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி!

By Manikanda Prabu  |  First Published Jul 14, 2023, 3:04 PM IST

ஒரே தேதியில் தேர்வுகள் வருவதை இவ்வளவு நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ள காலத்தில் தவிர்க்க இயலாதா என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்


“ஒரே தேசம் ஒரே தேர்வு” என்றெல்லாம் தேசத்தின் பன்முகத் தனமையை மறுதலிக்க முனைகிற அரசாங்கத்தால் ஒரே தேதியில் தேர்வுகள் வருவதை இவ்வளவு நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ள காலத்தில் தவிர்க்க இயலாதா என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஸ்டாப் செலக்சன் கமிஷன் தலைவர் கிஷோருக்கு 19.06.2023 அன்று கடிதம் எழுதி இருந்தேன். அதில் இரண்டு தேர்வுகள் - மத்திய அரசு ஊழியர் தேர்வாணையம் (Selection posts, Phase XI, 2023) மற்றும் தேசிய தேர்வு முகமையின் விஸ்வபாரதி, சாந்தி நிகேதன் தேர்வுகள் 27 & 28 ஜூன் 2023  - அதே தினங்களில் வருவதால் தேர்வர்கள் நலன் கருதி தேதிகளை மாற்றுமாறு எழுதி இருந்தேன். அதே போன்ற கோரிக்கையை தேசிய தேர்வு முகமையிடமும் வைத்திருந்தேன். ஒன்றிய பொதுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் (UPSC) அதனையொட்டிய இரண்டு நாடகளுக்குள்ளாக வருவதையும் குறிப்பிட்டு இருந்தேன்.

Tap to resize

Latest Videos

அதற்கு பதில் அளித்துள்ள ஸ்டாப் செலக்சன் கமிஷன் தலைவர் எஸ்.கிஷோர், (DO HQ - C - 1107/ 5/ 2023 / C2 / 28.06.2023) தேர்வு அட்டவணை பல மாதங்களுக்கு முன்பாகவே தயார் ஆகிறது, ஒரு தேர்வை தள்ளி வைத்தால் ஒட்டு மொத்த தேர்வுச் சுற்றுகளே தாமதமாகும், ஏற்கெனவே மனதளவில் தயாராகி உள்ள தேர்வர்கள் பாதிக்கப்படுவார்கள், தாமதமான தேர்வு முடிவுகளால் லட்சக் கணக்கான தேர்வர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அதனால் தேர்வுகளை தள்ளி வைக்க முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். 

மேற்கூறிய காரணங்களில் முதல் இரண்டை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மனதளவில் தயாரான தேர்வர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம் ஏற்புடையது அல்ல. இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு ஏற்படும் மன பாதிப்பை என்ன சொல்வது! 

ஆளுங்கட்சிக்கு ஆதரவான தேர்தல் பத்திரத் திட்டம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

நான்காவது காரணம், தாமதமான தேர்வு முடிவுகளால் லட்சக் கணக்கான தேர்வர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது முற்றிலும் பொருத்தமானது அல்ல.  லட்சக் கணக்கான அரசுப் பணி காலியிடங்கள் ஆண்டுக் கணக்கில் நிரப்பப்படாததால் கோடிக் கணக்கானவர்கள் உரிய காலத்தில் தேர்வர்களாகவே மாற முடிவதில்லையே! அப்புறம் எப்படி ஊழியர்களாக மாறுவது! 

"ஒரே தேசம் ஒரே தேர்வு" என்றெல்லாம் தேசத்தின் பன்முகத் தனமையை மறுதலிக்க முனைகிற அரசாங்கத்தால் ஒரே தேதியில் தேர்வுகள் வருவதை இவ்வளவு நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ள காலத்தில் தவிர்க்க இயலாதா?

ஆகவே எதிர்காலத்தில் இது போன்ற அரசுத் துறை நியமன தேர்வுகள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இருப்பதை உறுதி செய்ய ஊழியர் நலன் அமைச்சகம் (Ministry of Personnel) ஏதாவது வழிமுறையை கண்டறிய வேண்டும்.” என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

click me!