ஆளுங்கட்சிக்கு ஆதரவான தேர்தல் பத்திரத் திட்டம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

By Manikanda Prabu  |  First Published Jul 14, 2023, 2:48 PM IST

தேர்தல் பத்திரத் திட்டங்கள் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது


தேர்தல் பத்திரத் திட்டங்கள் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் நிதி அளிப்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, “ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையின்படி, 2016-17 நிதியாண்டு மற்றும் 2021-22 நிதியாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பாஜகவுக்கு கிடைத்த அரசியல் நன்கொடையான ரூ.5,271.97 கோடியில் 52 சதவீதத்திற்கும் அதிகமானவை தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்துள்ளது. அந்த காலகட்டத்தில் மற்ற அரசியல் கட்சிகள் பெற்றது ரூ.1,783.93 கோடி மட்டுமே.” என சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய பாஜக அரசின் சர்ச்சைக்குரிய, ஊழல் நிறைந்த, இட்டுக்கட்டப்பட்ட தேர்தல் பத்திரங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் ஒரு திட்டம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் நிதி அளிப்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என வலியுறுத்திய அவர், மோடி அரசு மற்றும் பாஜகவின் கார்ப்பரேட் பண பேராசையை நாங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

“கடந்த 2019 மக்களவை தேர்தல் அறிக்கையிலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராய்பூரில் நடந்த 85வது கூட்டத்திலும் ஆளும் கட்சிக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்வோம் என காங்கிரஸ் உறுதியளித்தது. அதற்கு பதிலாக,  எந்தவொரு நபரும் பங்களிக்கக்கூடிய தேசிய தேர்தல் நிதியை அமைப்பதாக நாங்கள் உறுதியளித்தோம்.” எனவும் பவன் கேரா தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின்படி அந்த நிதி ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்த சந்திராயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.. நிலவை அடைய எத்தனை நாட்கள் ஆகும்?

தேர்தல் பத்திரத் திட்டம் மூலம் ஆளுங்கட்சிக்கு ஏகபோகமாக நிதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு இது தீங்கு விளைவிக்கும் எனவும் அவர் குற்றம் சாட்டினார். “ஜனநாயகத்தை அழிப்பது, வெளிப்படைத்தன்மையைக் கைவிடுவது மற்றும் தேர்தல் நடைமுறைகளை தகர்ப்பது மட்டுமே மோடி அரசின் ஒரே குறிக்கோள்” எனவும் அப்போது அவர் சாடினார்.

பாரபட்சமற்ற நிறுவனமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும், பாரத ஸ்டேட் வங்கி போன்ற நிறுவனங்கள் மீது மத்திய பாஜக அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் சுமையை ஏற்படுத்தும். தேவையில்லாத அரசியல் அழுத்தங்களுக்கு அந்த நிறுவனங்கள் அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் பவன் கேரா தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்களில் குடிமக்களின் விவரம் இருக்காது என்ற போதிலும், எஸ்பிஐயிடம் இருந்து தரவைக் கோருவதன் மூலம் நன்கொடையாளர் விவரங்களை பெற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் பத்திரம் (Electoral bond) என்பது அரசியல் கட்சிக்கு அல்லது தனிநபர்களுக்கு நன்கொடை செலுத்த விரும்பும் ஒரு இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து வாங்கக்கூடிய ஒரு பத்திரமாகும். இந்த பத்திரங்களை இந்தியக் குடிமகன் அல்லது ஒரு நிறுவனம் தாங்கள் விரும்பும்  அரசியல் கட்சிக்கும் நன்கொடையாக வழங்கலாம். இப்பத்திரங்கள் ரூபாய் நோட்டுகள் போன்றதே.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951[5] (1951 இன் 43) பிரிவு 29A இன் கீழ் பதிவு செய்யப்பட்டு, சமீபத்திய பொதுத் தேர்தல்கள் அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் குறைந்தது ஒரு சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் பத்திரங்களை நன்கொடையாகப் பெற தகுதியுடையவர்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக செலுத்த முடியும். தேர்தல் பத்திரங்களில் நன்கொடையாளரின் பெயரை இருக்காது. இதனால், நன்கொடையாளரின் அடையாளத்தை அரசியல் கட்சி அறிய முடியாது. தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக செலுத்துவபர் மற்றும் பெறும் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும்.

click me!