ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்த சந்திரயான் 3 விண்கலம் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.
இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமே சந்திரயான் 3 திட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் கனவுத்திட்டமான சந்திரயான் விண்கலம் இன்று நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கி உள்ளது.
சந்திரயான் 1
நிலவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உருவாக்கிய திட்டம் தான் சந்திரயான் திட்டம். இந்த திட்டம் கடந்த 2003-ம் ஆகஸ்ட் 15-ம் தேதி அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி-யால் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2008-ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி, நிலவுக்கு இந்தியாவின் முதல் பயணமான சந்திரயான்-1 அக்டோபர் 22, 2008 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
நிலவின் வேதியியல், கனிமவியல் மற்றும் புகைப்பட-புவியியல் வரைபடத்திற்காக நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கிமீ உயரத்தில் சந்திரனைச் சுற்றி விண்கலம் சுற்றிக் கொண்டிருந்தது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் பல்கேரியாவில் கட்டப்பட்ட 11 அறிவியல் கருவிகளை இந்த விண்கலம் கொண்டு சென்றது. அதன்பின்னர் நிலவின் மேற்பரப்பில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நிலவில் தண்ணீர் இருப்பதாக இஸ்ரோ அறிவித்தது.
ஆனால் 1969-ல் இருந்தே நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்கா உட்பட வேறு எந்த நாடும் நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. சந்திரயான் 1 மூலம் இஸ்ரோ ஏவிய தரையிறங்கும் உபகரணம் அந்த சாதனையை படைத்தது. இதனால் உலக நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்தது.
சந்திரயான் 2
சந்திரயான் 1 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ சந்திரயான் 2 திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது. இதற்காக சுமார் 4 டன் எடையை தாக்கும் திறன் கொண்ட ஜிஎஸ்எல்வி எம்.கே 3 என்ற ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கியது. இந்த ராக்கெட்டின் உதவியுடன் கடந்த 2019, ஜூலை 22-ம் தேதி, சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 செப்டம்பர் 6-ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
பாதி வெற்றி, பாதி தோல்வி
அப்போது விக்ரம் என்ற லேண்டரையும், பிரக்யான் என்ற ரோவரும் அனுப்பப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் இயந்திரமான விக்ரம் தரையிறங்கும் முன் 2.1 கி.மீ தூரத்தில் சிக்னலை இழந்தது. மேலும், Soft Landing எனப்படும் மென்மையாக தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர் வேகமாக விழுந்தது. பின்னர் விக்ரம் லேண்டர் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கியதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். எனினும் சந்திரயான் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் தற்போது நிலவை சுற்றி வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆர்பிட்டர் நிலவின் பெரும்பகுதியை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது. எனவே சந்திரயான் 2 திட்டம் தோல்வி அடைந்த திட்டம் என்று சொல்ல முடியாது. பாதி வெற்றி, பாதி தோல்வி என்று தான் சொல்ல வேண்டும்.
சந்திரயான் 3
இந்த நிலையில் சந்திரயான்-2 பயணத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் பல புதிய அம்சங்களுடன் சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. சந்திரயான் 3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. LVM 3 M4 என்ற ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த சந்திரயான் 3 திட்டத்திற்கான மொத்த பட்ஜெட் ரூ.615 கோடி ஆகும். இந்த சந்திரயான் 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கினால், அமெரிக்கா, சீனா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய நான்காவது நாடாக இந்தியா மாறும்.
சந்திரயான் 3-ல் என்ன ஸ்பெஷல்?
சந்திரயான்-3 ஒரு லேண்டர் மாட்யூல் (LM), ஒரு உந்துவிசை தொகுதி (PM) மற்றும் ஒரு ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. LM ஒரு மென்மையான சந்திர தரையிறக்கத்தை எளிதாக்கும், அதே நேரத்தில் PM உந்துதலையும் கட்டுப்பாட்டையும் கையாளும். சந்திரனின் மேற்பரப்பை ஆராய்ந்து அறிவியல் தரவுகளை சேகரிப்பதே ரோவரின் பணியாக இருக்கும்.
எனினும் இந்த முறை விக்ரம் லேண்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அதிக வேகத்தில் தரையிறங்கினாலும், உடையாத வகையில் லேண்டரின் கால்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த முறை விக்ரம் லாண்டரில் அதிக எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. அதிக இடையூறு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள இது உதவும்.
இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்படும் நாள் அருகில் உள்ளது. சீறிப் பாய்ந்தது சந்திரயான் 3. pic.twitter.com/qvwdcBRfi4
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
Doppler Velocity Metre என்ற புதிய லேசர் கருவியும் விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சோலார் பேனல்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சூரியனுக்கு எதிரான திசையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கினாலும், தானாக மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்ளும்.
சந்திரயான் 3 விண்கலத்தில் தொலைத்தொடர்பு, மற்றும் இயக்கத்திற்கு தேவையான சென்சார் அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. லேண்டர் ரோவரில் தனித்தனியே தொலைத்தொடர்பு சாதனங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய தொழில்நுட்ப மாற்றம் மூலம் நொடிக்கு நொடி புதிய தகவல்களை பெற முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட நிலையில், ஏறக்குறைய 16 நிமிடங்களுக்குப் பிறகு, உந்துவிசை தொகுதி ராக்கெட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, புவியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுமார் 5-6 முறை சுற்றி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
LVM3 M4/Chandrayaan-3 Mission:
LVM3 M4 vehicle🚀 successfully launched Chandrayaan-3🛰️ into orbit.
பின்னர் சந்திரயான் விண்கலம் பூமியிலிருந்து 170 கிமீ தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திராயான் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. லேண்டருடன் சேர்ந்து உந்துவிசை தொகுதி, வேகத்தைப் பெற்ற பிறகு, சந்திர மேற்பரப்பில் இருந்து 100 கிமீ மேலே செல்லும் வரை சந்திரனின் சுற்றுப்பாதையை அடைய 1 மாதம் ஆகும். நிலவை அடைந்த பிறகு ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதி விக்ரம் லேண்டர் மென்மையாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 38 சாஃப்ட் லேண்டிங் முயற்சிகள் உலகில் உள்ள விண்வெளி நிறுவனங்களால் நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட்டுள்ளன. ஆனால் வெற்றி விகிதம் 52 சதவீதம் மட்டுமே. கடந்த முறை தோல்வியில் முடிந்த இந்தியாவின் சாஃப்ட் லேண்டிங் இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Chandrayaan 3: நிலவின் தென்துருவத்தில் என்ன இருக்கிறது? ஏன் இஸ்ரோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது?