பல கிலோ மீட்டர் நடந்தே சென்று, கேரள வெள்ள நிவாரணத்திற்கு பணம் கொடுத்த பிச்சைகாரர்! கொண்டாடும் கேரள மக்கள்

By sathish kFirst Published Sep 3, 2018, 1:15 PM IST
Highlights

4 கிமீ தூரம் நடந்து சென்று, கேரள வெள்ள நிவாரணத்திற்கு பண உதவி செய்த பிச்சைகாரரை கேரள மக்கள் கொண்டாடி வருன்கின்றனர். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது

கேரள மாநில சமீபத்தில் சந்தித்த மழைவெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நாலா பக்கமும் இருந்து நிவாரண உதவிகள் வந்து குவிந்தாலும் அது கேரளத்தை மறுசீரமைக்க போதுமானதாக இல்லை. அந்த அளவிற்கு பெருத்த சேதத்தினை சந்தித்திருக்கிறது கேரளம். கேரளத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த பேரதிர்ச்சியை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்திருந்தாலும் கொடுத்திருக்கும் நிவாரணத்தொகை அந்த பேரிடரால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை சரி செய்ய போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனாலும் கேரளாவிற்கு மக்கள் தரப்பில் இருந்து உதவிகள் இன்னமும் வந்து கொண்டுதான் இருக்கிறது. முகாம்களில் இருக்கும் பலருக்கு திரும்பி செல்வதற்கு வீடு கூட இல்லை. நிலச்சரிவினால் பலரின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டது. இந்நிலையில் கேரளாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர கடும் முயற்சி மேற்கொண்டிருக்கிறது கேரள அரசு. 

கேரளத்திற்காக மக்கள் கொடுக்கும் எந்த ஒரு சிறிய தொகையும் கூட இப்போது பெரிய தொகையாகவே கருதப்படுகிறது. சிறுதுளி தானே பெரு வெள்ளம். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ஒரு பிச்சைகாரர் செய்திருக்கும் செயல் அப்பகுதி மக்களை நெகிழச்செய்திருக்கிறது. கோட்டையம் பகுதியை சேர்ந்த மோகனன் எனும் நபர் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தூரம் கால் நடையாக சென்று எரட்டுப்பெட்டா எனும் பகுதியின் சேர்மன் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

கிழிந்த உடையில் இருந்த அவரை பார்த்த சேர்மன் அவர் ஏதோ பொருளுதவிக்காக தான் தன்னை தேடி வந்திருக்கிறார் என நினைத்து மோகனன் கையில் 20 ரூபாயை கொடுத்திருக்கிறார். ஆனால் மோகனனோ தன் கையில் இருந்த சிறிய துணிமுடிப்பை எடுத்து அதில் இருந்த காசுகளுடன் இந்த 20 ரூபாயையும் சேர்த்து 94 ரூபாயை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக கொடுத்திருக்கிறார். 

அவரின் ஏழ்மையிலும் பிறருக்கு உதவிட வேண்டும் எனும் நல்ல நோக்கமும் அந்த நோக்கம் நிறைவேறிட அவர் மேற்கொண்ட முயற்சியும் அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட அப்பகுதி சேர்மன், மோகனனை மிகவும் பாராட்டி இருக்கிறார். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று ஒரு குறள் உண்டு, மோகனனின் இந்த செயல் பிச்சை புகினும் ஈதல் நன்றே என்று நம்மை சிந்திக்க வைக்கிறது.

click me!