
அனுமன் ஜெயந்தி ஊர்வலம்:
வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் நேற்று மாலை நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வகுப்புவாத மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஏராளமான போலீசார் காயமடைந்தனர். அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஏஎஸ்ஐ அருண்குமார் எனும் போலீசார் கல்லால் தாக்கப்பட்டார். அவருக்கு கால் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனிடயே தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், வன்முறையில் தான் பார்த்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும், எங்கு பார்த்தாலும் பெரும் குழப்பமும், சலசலப்பும் நிலவி இருந்ததாகவும் அவர் கூறினார்.மேலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் தொடக்கத்தில் இருந்தே தான் இருந்ததாகவும் சிலை வைக்கப்பட்ட காரின் பின்னால் பாதுகாப்பு பணியில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
வெடித்த வன்முறை:
இந்நிலையில் ஊர்வலம் குஷால் சவுக்கை அடைந்ததும், ஆயிரக்கணக்கானோர் திடீரென ஊர்வலத்தை நோக்கி வந்தனர். அப்போது "நான் பார்த்ததை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியாது. சுற்றிலும் சலசலப்பு ஏற்பட்டது," என்று அவர் பதற்றத்துடன் கூறினார். ஊர்வலத்தை நோக்கி வந்த அந்த கும்பலில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலர் அடங்குவர்.திடீரென்று இரு தரப்பிலிருந்தும் கல் வீச்சு தாக்குதலும் ஆயுதங்களால் தாக்குதலும் நடந்ததாக அவர் கூறினார். மேலும் நாங்கள் அவர்களை அமைதிப்படுத்த முயற்சித்தும், எங்கள் பேச்சைக் கேட்க யாரும் தயாராக இல்லை என்று அவர் குறிப்பிட்டார். அந்த மர்ம கும்பலில் அனைவரும் கைகளில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும் சுற்றிலும் கற்கள், பாட்டில்களை பார்க்க முடிந்ததாகவும் பரபரப்புடன் தெரிவித்தார்.
கல்வீச்சு தாக்குதல்:
நான் கல்லால் அடிப்பட்ட போதும் கூட மக்களை காப்பாற்ற முற்பட்டேன். ஊர்வலத்தில் இருந்த மக்கள் அனைவரும் தலைதெறிக்க ஒட ஆரம்பித்தனர். கார்களில் தீவைக்கப்பட்டது. நாங்களை அதனை தடுத்து அவர்களை நிறுத்தினோம் என்று பேட்டியில் கூறினார்.இந்த சம்பவத்தில் மொத்தம் 8 போலீசார் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று நடந்த வன்முறையில் கற்கள் வீசப்பட்டதாகவும், சில வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து நேற்றிரவு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய டெல்லி போலீசார் இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர்.
வைரல் வீடியோ:
இந்த நிலையில், தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் புது வீடியோவில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வாள், துப்பாக்கி, ஷாட் கன் உள்ளிட்டவைகளை காற்றில் கண்மூடித்தனமாக வீசிய பகீர் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த வீடியோ ஜஹாங்கீர்புரியின் சி-டி பிளாக் மார்கெட் பகுதியில் வைத்து எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ கல்வீச்சு தாக்குதல் தொடங்கும் முன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: டெல்லி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் ஆயுதங்கள்.. வெளியான வீடியோ... புது தகவலால் பரபரப்பு..!