
கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த இந்தியாவின் சந்திராயன் 1 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையிலேயே இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்திய விண்வெளித்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது சந்திராயன் 1. ஆளில்லா இந்த விண்கலம் நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு விண்ணுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. மிகக் குறைந்த செலவில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை சந்திராயன் 1 விண்கலம் மூலம் இந்தியா பெற்றது.
நிலவை ஆய்வு செய்ய அமெரிக்கா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகள் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து கைகளை பிசைந்து கொண்டிருந்த நிலையில் இந்தியா சில கோடிகளில் சப்தமில்லாமல் சந்தியராயன் 1 மூலம் சாதனை படைத்தது...
தனது பயண திட்டமான இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்த விண்கலம் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதன் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே லூனார் கோளின் சுற்றுவட்டப்பகுதியில் 200 கிலோ மீட்டர் தொலைவில் சந்திராயன் 1 விண்கலம் இருப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சந்திராயன் 1 விண்கலத்தைத் தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தை அடுத்தாண்டு விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.