
அமெரிக்காவில் இரு இந்தியர்கள் இனவெறியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார்?, இதை தீவிரமாக கருதி செயல்பட வேண்டும்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
ஒத்திவைப்பு தீர்மானம்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. மக்களவை நேற்று தொடங்கியவுடன், எதிர்க்கட்சி எம்.பி.கள், இந்தியர்கள் இருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர அவைத் தலைவர் சுமித்ராமகாஜனிடம் கோரினர்.
ஆனால், இந்த விவகாரத்தை கேள்வி நேரத்துக்கு பின்பு விவாதிக்கப்படும் என்று சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
அரசு தோல்வி
இதையடுத்து, கேள்வி நேரத்துக்கு பின், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களளைத் தலைவருமான மல்லிகார் ஜுன கார்கே பேசுகையில், “ அமெரிக்காவில் இரு இந்தியர்கள் இனவெறியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த இனவெறி சம்பவங்களால் இந்தியர்கல் மத்தியில் பெரும் அமைதியற்ற சூழல்நிலவுகிறது. ஆனால், இந்த விவகாரத்தை அமெரிக்காவின் உயர்மட்ட அளவில் கொண்டு சென்று ஆலோசிக்க மத்திய அரசுதவறி, தோற்றுவிட்டது.
மவுனம் ஏன்?
இந்தியர்கள் கொல்லப்பட்ட பின்பும், பிரதமர் மோடி அரசு ஏன் இன்னும் மவுனம் காக்கிறது?. ஒவ்வொரு விசயத்துக்கும் பிரதமர் மோடி டுவிட்டரில் டுவிட் செய்வார். இதுபோன்ற தீவிரமானவிசயத்தில் ஏன் இன்னும் அவர் மவுனம் காக்கிறார்?
இனவெறி அதிகரிப்பு
பிரதமர் மோடி வெளிநாட்டு தலைவர்களை கட்டிப்பிடிப்பதிலும், சீன தலைவர் ஜி ஜிங்பிங்குடன் அமர்ந்து பேசுவதிலும் ஆர்வம் காட்டுகிறார். இதுபோன்ற முக்கியமான விசயத்தை எழுப்பி பேசவில்லை. அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் இனவெறிச்சம்பவங்கள் அதிகரித்து விட்டது'' என்றார்.
துணிச்சலுடன் கேளுங்கள்
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகத்ரா ராய் பேசுகையில், “ அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாக்க மத்தியஅரசுக்கு ஆர்வம் இல்லை. அதிகமான மக்களின் ஆதரவுபெற்றவரும், நன்றாக பேசக்கூடியவருமான நமது பிரதமர் மோடி ஏன் இன்னும் மவுனம் காக்கிறார்?. புத்திசாலித்தனத்துடனும், துணிச்சலுடனும் அமெரிக்காவில் நிகழும் சம்பவங்களை எதிர்க்க வேண்டும்'' என்றார்.
எச்சரிக்கை
பிஜூ ஜனதா தளம் கட்சியின எம்பி. பாரத்ருஹரி மஹ்தாப் பேசுகையில், “ அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு, மத்திய அரசு ஆலோசனை வழங்கி, பாதுகாப்பு இல்லாத இடங்களுக்கு பயணிக்க வேண்டாம் என்று கூறவேண்டும். இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுரை கூறுகிறது அதுபோல் கூறலாம்'' என்றார்.
அறிக்கை தாக்கல்
முன்னதாக கேள்வி நேரத்தின் போது, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “ அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விசயம் மிகவும் தீவிரமானது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்ைக எடுக்கப்படும். இது தொடர்பாக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்'' என்றார்.
தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. ஜிதேந்திர ரெட்டி பேசுகையில், “ அமெரிக்க அரசிடம், மத்திய அரசு பேச்சு நடத்தி, முறைப்படியான அறிக்கை பெற்று தாக்கல் செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.