
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் 5 லட்சம் விபத்துக்களில் 1.5 லட்சம் பேர் பலியாகிறார்கள் என்று மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது-
ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் 5 லட்சம் விபத்துக்களில் 1.5 லட்சம் பேர் பலியாகிறார்கள். சாலைகள் அமைப்பும் இந்த அளவு விபத்துக்கள் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். விபத்துக்களை குறைத்து, உயிரிழப்புகளைத் தடுக்க அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கிராமங்கள், சிறுநகரங்களைக் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க,அதிகமான சுரங்கப்பாதைகள், ேமம் பாலங்கள் கட்டப்படும். இதுவரை ரூ. ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 180 கோடி மதிப்பில், 14 ஆயிரத்து 268 கி.மீ சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது.
2016-17ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றவும், மேம்படுத்தவும் ரூ.62 ஆயிரத்து 46 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தேசியநெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணமாக ரூ.43 ஆயிரத்து 721 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.