
வங்கி என்றாலே பணம் டெபாசிட் செய்வது, பணம் எடுப்பது போன்ற நடவடிக்கைகள் இருக்கும். ஆனால், பணமே இல்லாத வங்கி அறிமுகமாக உள்ளது. இங்கு பணம் டெபாசிட் செய்யவும் முடியாது, எடுக்கவும் முடியாது.
கரூர் வைஸ்யா வங்கி சார்பில் வரும் செப்டம்பர் மாதம் பணம் இல்லாத , முற்றிலும் டிஜிட்டல் பேமெண்ட் வங்கி தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கே. வெங்கட் ராமன் கூறுகையில், “ பணப்பரிமாற்றமே இல்லாத வங்கிகளை நாங்கள் உருவாக்க இருக்கிறோம். இங்கு முற்றிலும் டிஜிட்டல் பரிமாற்றம் மட்டுமே இருக்கும். பணம் டெபாசிட் செய்யவும் முடியாது, பணம் எடுக்கவும் முடியாது. 600 முதல் 800 சதுர அடி பரப்பில் அலுவலகம் அமைக்கப்படும். அதில் 3 முதல் 4 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த பணப்பரிமாற்றம் இல்லாத வங்கி, மற்ற வங்கிக் கிளைகளுக்கு வர்த்தகத்தை கொடுக்கும். புதிய கணக்குகள் அதிகமாக தொடங்கி பெரிய மைல்கல்லை நாங்கள் எட்டும் நேரத்தில் இந்த வங்கியை நாங்கள் தொடங்குகிறோம். சராசரியாக நாங்கள் மாதத்துக்கு 60 ஆயிரம் புதிய வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது ஒரு லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், கரூர் வைஸ்யா வங்கியின் வாராக்கடன்களை வசூலிக்கவே பிரத்யேகமாக கடன் மீட்பு கிளைகள் என்று 3 கிளைகளை தொடங்க இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.