
நாட்டில் கருப்பு பணம் பதுக்கியவர்கள், கருணை திட்டமான ‘பிரதமர் கரீப் கல்யான் திட்டத்தின்’ கீழ் தங்கள் கணக்கில் வராத வருமானம் அனைத்தையும் நேர்மையாக தெரிவித்து விடுங்கள். இல்லாவிட்டால், அபராதம், வரி என 77 சதவீதமும், விசாரணையையும் சந்திக்க நேரிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டு, ஊழலை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் கரீப் கல்யான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இதன்படி, கருப்புபணத்தை வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பதுக்கியவர்கள், கணக்கில் வராத சொத்துக்கள் வைத்து இருப்பவர்கள் வெளிப்படையாக வந்து வருமான வரித்துறையினரிடம் தெரிவித்தால், அந்த தொகையில் 50 சதவீதம் அபராதம், 25 சதவீதத்தை 4 ஆண்டுகளுக்கு வட்டியில்லாத டெபாசிட்டாக வைக்கப்படும் எனத் தெரிவித்தது.
இந்த திட்டத்தின் கீழ் கருப்புபணம் பதுக்கியவர்கள் தங்கள் கணக்கில் வராத வருமானத்தை 2017, மார்ச் 31-ந் தேதிக்குள் நேர்மையாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ‘பிரதமர் கரீப் கல்யான் திட்டம்’ இந்த மாத இறுதியில் முடிவதால், அனைத்து தேசிய நாளேடுகளில் வருமான வரித்துறை நேற்று விளம்பரம் செய்து, கருப்புபணம் பதுக்கியவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
அதில், “ உங்களின் விரல் ரேகை போன்று, உங்களின் கருப்புபணமும் உங்களுக்கு முன்பாக செல்லும். வெளியிடப்படாத கணக்கில் வராத வருமானம் வரிவிதிப்புக்கு உட்பட்டது. வரி, அபராதம் என 77.25 சதவீதமும், அமலாக்கப்பிரிவு நடவடிக்கையையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.
உங்களின் கணக்கில் வராத வருமானம், சொத்துக்கள் குறித்து வருமான வரித்துறையிடம் தகவல் இருக்கிறது. ஆதலால், நேர்மையாக வந்து பிரதமர் கரீப் கல்யான் திட்டத்தில் உங்களின் கணக்கில் வராத சொத்துக்கள் குறித்த தகவலை அளித்துவிடுங்கள். இந்த காலக்கெடு மார்ச் 31-ந் தேதியோடு முடிகிறது. இவ்வாறு தெரிவிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக பாதுகாக்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்புபணம் பதுக்கியவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடைசிவாய்ப்பு இதுவாகும்.