வேகமாக பரவும் கொரோனா... கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கத் தடை!!

By Narendran SFirst Published Jan 25, 2022, 10:44 PM IST
Highlights

கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவின் பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைக்க அரசு பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, 50 சதவிகித திறனுடன் ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் இயங்குதல், தியேட்டர்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்தியா மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை எல்லையில் சுமார் 290 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கச்சத்தீவு உள்ளது. இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் பயன்படுத்தவும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கச்சத்தீவில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம், இருநாட்டு மீனவர்களுக்கும் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவில் இந்தியா - இலங்கையை சேர்ந்த இருநாட்டு மக்களும் திரளாக கலந்துகொள்வார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு திருவிழா வரும் மார்ச் மாதம் 11, 12 ஆம் தேதியில் நடைபெற உள்ளது, அதில் இலங்கையை சேர்ந்த 500 நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்தியர்களுக்கு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கொரோனா காரணமாக இலங்கையை சேர்ந்த 500 பேர் மட்டும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியர்களுக்கு சொந்தமான அந்த பகுதியில் பல்வேறு இந்தியர்கள் அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பார்கள். இந்த நிலையில் இந்தியர்களுக்கு தடை விதித்த செய்தி மாபெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

click me!