கனடா வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

By Manikanda Prabu  |  First Published Sep 20, 2023, 4:02 PM IST

கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது


இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்பாக சிக்கல் நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களை இந்தியா தடை செய்த அமைப்புகளாக அறிவித்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Tap to resize

Latest Videos

இந்த கொலையில், கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியதாக கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக, பஞ்சாப்பில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக காலிஸ்தான் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கடந்த 2020ஆம் ஆண்டு பயங்கரவாதியாக அறிவித்தது.

இந்த பின்னணியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்து சென்றார். அதன் தொடர்ச்சியாக, கனடா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கான தொடர்புகள் இருக்கலாம் என குற்றம் சாட்டியதுடன்,  இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியது. மேலும், பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவில் வாழும் கனடா மக்கள் கவனமாக இருக்கும்படி அந்நாட்டு மக்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இந்திய அரசு, அந்நாட்டு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இந்தச் சம்பவத்தால், கனடா - இந்தியா உறவுக்கிடையில் விரிசல் ஏற்பட்டு, பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், “கனடாவில் வளர்ந்து வரும் இந்திய-விரோத நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வெறுப்புக் குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அனைத்து இந்திய குடிமக்களும், பயணம் மேற்கொள்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரானவர்களை எதிர்க்கும் இந்திய  சமூகத்தினர் குறி வைக்கப்பட்டு, அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடந்த கனடாவில் உள்ள பகுதிகள் மற்றும் சாத்தியமான இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்தியப் பிரஜைகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கனடாவை விட்டு வெளியேறுங்கள்: இந்துக்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணு மிரட்டல்

கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, கனடா அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பர். கனடாவில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதால், குறிப்பாக இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், ஒட்டாவா, டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்தியத் தூதரகம், துணைத் தூதரகத்தில் அந்தந்த தூதரகத்தில் இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் அல்லது madad.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது, கனடா வாழ் இந்தியர்களுக்கு ஏதேனும் அவசர உதவி அல்லது விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்பு கொள்ள இது உதவும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கனடாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவுக்குச் செல்லுங்கள் என்று கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் குர்பத்வந்த் சிங் பண்ணு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

click me!