
Central Government Gives Additional Powers to Army Chief: பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவ முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் நேற்று இரவு 8 மணியளவில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பல இந்திய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களைத் தாக்க முயன்றது, ஆனால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் அது முறியடிக்கப்பட்டது.
பின்னர் இந்திய ராணுவமும் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லி சவுத் பிளாக்கில் இந்தியாவின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே. சிங் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறும் நிலையில் இந்தியா அடுத்து என்ன செய்ய வேண்டும்? இப்போது வரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தங்கள் படைகளின் எதிர்வினை குறித்து முப்படைகளின் தளபதியும் ராஜ்நாத் சிங்குக்கு விளக்கி கூறினார்கள். இந்த கூட்டத்துக்கு பிறகு ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இதன்பிறகு ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜ்நாத் சிங் முப்படைகளை சந்தித்த நிலையில், மத்திய அராசிடம் இருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த அதிகாரத்தின் மூலம் பகுதி நேர தன்னார்வலர் கொண்ட படையை ராணுவ தளபதியால் வழிநடத்த முடியும். மேலும் நாட்டின் பிற பணிகளில் உள்ள பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ராணுவ வீரர்களை உடனடியாக போர் களத்துக்கு அழைக்கும் பணியை ராணுவ தளபதி மேற்கொள்ள முடியும்.