
Pakistan spreads fake videos Attacked on Jammu air force base: பஹல்காம் பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. ஆனால் பயங்கரவாதிகளை பாதுகாக்கும் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பொதுமக்கள் மீது வெளிப்படையாக தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இந்திய ராணுவம் வானிலேயே தாக்கி அழித்தது.
பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளும் அந்த நாட்டின் ராவல்பிண்டி, பெஷாவர், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் சில வீடுகள், கட்டடங்கள் சேதம் அடைந்தன. உயிரிழப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போர் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து பல்வேறு போலி வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதாவது ஜம்மு காஷ்மீரின் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்ததாகவும், இதனால் விமானப்படை தளம் வெடித்து சிதறுவது போலவும் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த வீடியோ முழுக்க முழுக்க போலியானது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போலி வீடியோக்களை பரப்பும் பாகிஸ்தான்
அதாவது 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பின் போது பதிவான வீடியோவை இந்தியாவை தாக்கியது போல் சித்தரித்து பாகிஸ்தான் பரப்பி வருவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தொடர் தாக்குதலை பாகிஸ்தானால் சமாளிக்க முடியவில்லை. இதனால் ஒரு சில பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் பாகிஸ்தான் பெரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக போலி வீடியோக்களை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
இதுபோன்ற போலி வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இது போன்ற வீடியோக்களை பரப்ப வேண்டாம் எனவும் இந்திய ராணுவம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுததுள்ளது. இந்தியாவை சமாளிக்க முடியாமமல் பொய் பிரசாரம் மேற்கொள்வதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்கியதாகவும், மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பி வருகிறது.
இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்து உள்ள நிலையில், உலக நாடுகளிடம் இந்தியா மீது கெட்ட பெயர் ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. அதன் அடிப்படையில் தான் போலியான வீடியோக்கள், போலியான செய்திகளை பாகிஸ்தான் தொடர்ந்து பரப்பி வருகிறது. ஆகவே இது குறித்து இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேன்டும்.