
நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தீவிர போர்தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரிங்களில் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் குண்டு மழைகளை பொழிந்து வருகிறது. உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக, உக்ரைன் நாட்டிலிருந்து இவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கல்வி , வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக உக்ரைனில் குடியேறிய இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. ஆபரேஷன் காங்கா எனும் திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கியுள்ள 20,000 க்கும் மேற்பட்ட இந்தியர்களை தரை வழியாக அண்டை நாடுகளுக்கு அழைத்து வந்து, அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் வந்தனர். ஏர் இந்தியா, இண்டிகோ, உள்ளிட்ட விமானங்களும், விமான படையின் சி- 17 ரக விமானமும் இந்த மீட்பு பணியில் ஈடுப்பட்டன.
இதனிடையே இன்று மாநிலங்களவையில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். அவர் பேசியதாவது, உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க ஆபரேஷன் கங்கா திட்டம் தொடங்கப்பட்டது. கடும் சவால்களுக்கு மத்தியில் உக்ரைனிலிருந்து 22,500 க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
உக்ரைனிலிருந்து அதிகளவிலான இந்தியர்கள் அங்குள்ள மருத்துவ பல்கலைகழகங்களில் படித்து வந்ததாகவும் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரஷ்ய எல்லையான கிழக்கு உக்ரைன் பல்கலைகழகங்களில் படித்து வந்ததாகவும் அவர் பேசினார். மேலும் உத்தர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ராஜஸ்தான்,பிகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
உக்ரைனில் பொது போக்குவரத்திற்கான விமானங்கள் பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் 90 விமானங்கள் இயக்கப்பட்டன. இந்திய விமானப் படையின் 14 விமானங்களும், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்,இண்டிகோ,ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களின் 76 விமானங்களும் மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டதாக அவர் விளக்கினார்.
இதனிடையே உக்ரைன் போரில் எதிர்பாராதவிதமாக கர்நாடகத்தை சேர்ந்த ஒரு மாணவன் பலியாகியுள்ளார்.அவரின் உடல் இந்தியாவிற்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கபட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், காயமடைந்த மற்றொரு மாணவன் பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறினார்.
உக்ரைனிலிருந்து இந்தியர்கள் அண்டைநாடுகளுக்கு செல்ல சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்தியர்களை மீட்கும் பணியில் உதவிய தன்னார்வலர்களுக்கும் அண்டை நாடுகளில் இந்தியர்களை மதிப்புடன் நடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளுவதாக அமைச்சர் பேசினார்.
இந்த மீட்பு பணிகளுக்கு மத்திய பாதுகாப்பு, விமான போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவை உதவி செய்தன. இந்தியர்களை சுமி மற்றும் கீவ் நகரங்களிலிருந்து மீட்பதற்கு பிரதமர் மோடி ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் பேசினார்.