Hijab Verdict: ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும்.. கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Published : Mar 15, 2022, 10:48 AM ISTUpdated : Mar 15, 2022, 11:19 AM IST
Hijab Verdict: ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும்.. கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

சுருக்கம்

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். 

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ஹிஜாப் விவகாரம்

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்கள் வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா  அணிந்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். சில கல்லூரிகளில் இரு தரப்பு மாணவர்களும் மாறி மாறி கோஷங்களையும் எழுப்பினர். கல்லூரிகளில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், சில நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை நடைபெற்றது. அப்போது, பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ-மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 

தீர்ப்பு வெளியானது 

அதன்பின்னர், இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. கல்வி நிறுவனங்களில் தலையை மூடும் வகையிலான ஆடை அணிவதைத் தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லை என்று மாணவிகள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசியலமைப்பால் வழங்கப்பட்ட மத சுதந்திரத்தின் கீழ், ஹிஜாப் அணிய தடை இல்லை என்றும், பொது ஒழுங்கு மீறலைக் கருத்தில் கொண்டு அதைத் தடை செய்ய முடியுமா? என்றும்  அவர்கள் வாதிட்டனர். நிறுவன ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நியாயமான கட்டுப்பாடுகளைத் தவிர இந்தியாவில் ஹிஜாப் அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை. அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே  என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

144 தடை உத்தரவு

இதனால், கர்நாடகாவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பொது இடங்களில் அனைத்து வகையான போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும், கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 21ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு காவல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பெங்களூரில் ஒரு வாரம் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!