
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தால், அந்நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்த தயங்காது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி எல்லையை ஒட்டியுள்ள உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில், 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக அம்மாதம் 29ம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியது.
இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். துல்லியத் தாக்குதல் எனப் பெயரிடப்பட்ட இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேவை ஏற்பட்டால், மீண்டும் பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்த இந்தியா தயங்காது என தெரிவித்தார்.
இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், பாகிஸ்தான் தனது நிலையை மாற்றிக்கொள்ளும் வரை இதுபோன்ற தாக்குதல் நிகழாது என உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
லஷ்கர்-இ-தொய்பா தலைவர் அஃபீஸ் சையது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், ஹஃபீஸ் சையது மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.