ஐரோப்பிய நாடுகளில் தடை எதிரொலி... கோவிஷீல்டு மருந்தால் பக்க விளைவா?... மத்திய அரசு தீவிர கண்காணிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 14, 2021, 11:04 AM IST
Highlights

 இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் பக்க விளைவு குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக தேசிய கொரோனா பணிக்குழுவின் செயல்பாட்டு ஆராய்ச்சி  பிரிவு தலைவர் என்.ஆர்.அரோரா தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கோரதாண்டவம் ஆடிய கொரோனா தொற்று இந்தியாவையும் ஆட்டி படைக்காமல் விடவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று டிசம்பர் மாதத்தில் தான் கட்டுக்குள் வர ஆரம்பித்தது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரஜெனகா மருந்து நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை உருவாக்கின. 

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 முதல் 59 வயதுள்ளவர்களில் இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெறுகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரஜெனகா என்ற தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பாதிப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே  உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ரஜெனகாவின் கொரோனா தடுப்பூசிக்கு  திடீர் தடை விதித்துள்ளன. அந்நாடுகளில் அஸ்ட்ஜெனகா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் பக்க விளைவு குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக தேசிய கொரோனா பணிக்குழுவின் செயல்பாட்டு ஆராய்ச்சி  பிரிவு தலைவர் என்.ஆர்.அரோரா தெரிவித்துள்ளார். “நாங்கள் இரு  தடுப்பூசியின் பக்கவிளைவுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.  இந்தியாவில் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கவலை  கொள்ளும்படியான பாதிப்புகள் இருந்தால் நிச்சயம் அது தெரிவிக்கப்படும். தடுப்பூசி போடுவதில் கடுமையான கண்காணிப்பு நெறிமுறைகள் உள்ளன. தற்போதைய  நிலையில் எந்த அச்சத்திற்கும் அவசியமில்லை” என தெரிவித்துள்ளார். 

click me!