இந்தியாவில் 53 நாட்களில் 25.6 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா

By karthikeyan VFirst Published Mar 11, 2021, 6:02 PM IST
Highlights

கொரோனா தடுப்பூசி மீதான மக்கள் நம்பிக்கையை அதிகரித்து அதிகமானோருக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், தடுப்பூசி போட ஆரம்பித்த 53 நாட்களில் அதிகமான டோஸ் போடப்பட்டதில் அமெரிக்காவிற்கு அடுத்த 2ம் இடத்தில் உள்ளது இந்தியா.
 

உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு, தடுப்பூசியை நாட்டு மக்களிடத்தில் கொண்டுசேர்ப்பது ஆகியவற்றில் வளர்ந்த நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியர்களுக்கு போடப்பட்டுவருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில்,  இந்த தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கும் வழங்கப்பட்டுவருகிறது.

மார்ச் ஒன்றாம் தேதி முதல் 2ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. முதல் நபராக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. மக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக, முதல் நபராக பிரதமரே போட்டுக்கொண்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் டோஸை போட்டுக்கொண்டார். அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட முதல் நாளே 1,91,181 பேருக்கு போடப்பட்ட நிலையில், 53 நாட்களில் 25.6 மில்லியன் பேருக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தடுப்பூசி போட தொடங்கியதிலிருந்து முதல் 53 நாட்களில் அதிக பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது இந்தியா. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மீதான மக்களின் நம்பிக்கை, 2 மாதத்தில் சுமார் 60% அதிகரித்துள்ளது. அதனால், மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி ஒரு நாட்டில் போட தொடங்கியதிலிருந்து, முதல் 53 நாட்கள் முடிவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அதில், இந்தியா அமெரிக்காவிற்கு அடுத்த 2ம் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் முதல் 53 நாட்களில் 36.8 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவில் முதல் 53 நாட்களில் 25.6 மில்லியன்(2 கோடியே 56 லட்சம்) பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பிரேசில்(11.3 மில்லியன்) 3ம் இடத்திலும், துருக்கி(10 மில்லியன்) 4ம் இடத்திலும், பிரிட்டன்(9.47 மில்லியன்) 5ம் இடத்திலும் உள்ளன. 

வளர்ந்த நாடுகளைவிட கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிலும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி அதிகமானோருக்கு தடுப்பூசியை போடுவதிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 
 

click me!