
இலங்கையின் கடினமான காலகட்டத்தை கடக்க இலங்கை மக்களுடன் துணை நின்றதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்ரீ அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். இலங்கையின் நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்ரீ அரிந்தம் பக்சி, இந்தியா இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு. நமது இரு நாடுகளும் ஆழமான நாகரீக பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இலங்கையும் அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை நாங்கள் அறிவோம், மேலும் இந்த கடினமான காலகட்டத்தை கடக்க இலங்கை மக்களுடன் நாங்கள் துணை நின்றோம். எமது அண்டை நாடு முதல் கொள்கையில் இலங்கை வகிக்கும் கேந்திர இடத்தைப் பின்பற்றும் வகையில், இலங்கையின் பாரதூரமான பொருளாதார நிலைமையை சீர்செய்வதற்காக இந்தியா இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: கோத்தபய ராஜபக்ச எங்கிருக்கிறார்? வெளியே கசிந்த தகவல்.!
இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்திகளை நாம் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் கனவுகளை நனவாக்க முற்படும் இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: இலங்கை நெருக்கடி சூழல்... அதிபர் கோத்தய ராஜபக்சே ராஜினாமாவுக்கு பின் என்ன நடக்கும்?
அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை உயர்வு, பற்றாகுறை, எரிபொருள் தட்டுப்பாடு என ஏராளமான பிரச்சினைகளால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், மக்கள் நடத்தும் போராட்டம் வலுப் பெற்று உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை கைப் பற்றிய போராட்டக்காரர்கள், பொருட்களை கைப்பற்றியதோடு, அங்கேயே தங்கி உள்ளனர். இதோடு பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கே தனிப்பட்ட வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.