
இந்திய இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டி டிராவில் முடிந்தாலும், ஏற்கெனவே இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றிருந்ததால், 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி. மேலும், தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களில் வென்று இந்திய அணி அசத்தல் சாதனை படைத்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டை செஞ்சுரி அடித்துக் கைகொடுக்க, 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.
இதன் பின்னர், தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கிய இலங்கை அணி 373 ரன் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதை அடுத்து, முதல் இன்னிங்ஸில் பெற்ற 163 ரன் முன்னிலையுடன் இந்தியா இரண்டாவது இன்னிங்சை ஆடத் துவங்கியது. இதில், ஷிகர் தவான் 67 ரன், கோலி 50 ரன், ரோகித் சர்மா 50 ரன் என எடுத்து, சிறப்பாக ஆடினர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 52.2 ஓவர்களில் 5 விக்கெட்டு இழப்புக்கு 246 ரன் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 410 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடத் தொடங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணறியது. நான்காவது நாளான நேற்று, ஆட்ட நேர முடிவில், அந்த அணி, 16 ஓவர்ல் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்து திணறிக் கொண்டிருந்தது.
ஆட்டத்தின் கடைசி நாளான இன்று, களத்தில் இருந்த மேத்யூஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். தாக்குப்பிடித்து ஆடிக் கொண்டிருந்த சண்டிமால் 36 ரன் எடுத்திருந்த போது, அஷ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த ரோஷன் சில்வா, டிக்வெல்லா இருவரும் நிலைத்து நின்று தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 103 ஓவர் முடிந்த நிலையில், இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து ஆடிக் கொண்டிருந்த போது, போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் விநோதமாக, இலங்கை அணி வீரர்கள், தில்லி காற்று மாசுபட்டதால், முகத்தில் முகமூடி அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத் தக்கது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. அத்துடன், தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்று அசத்தல் சாதனையைப் படைத்தது இந்திய அணி .