
சீனாவுடனான எல்லை பிரச்னை, காஷ்மீரில் கடந்த 5 மாதங்களாக நிலவி வரும் பதற்றமான சூழல் உள்ளிட்டவற்றை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அதற்கு முன்பாக எதிர்க்கட்சிகளை சந்தித்து விளக்கம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பு நாளை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிக்கிம் மாநிலத்தில் இந்தியா – பூடான் – திபெத் நாடுகளின் எல்லை சந்திக்கும் டோகா லா பகுதி உள்ளது. இங்கு 3 வாரங்களுக்கு முன்பாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சீன ராணுவத்தினர். அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இதையடுத்து எல்லையில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டு சீனாவின் சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது, இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கைகலப்பு உருவானது. இதன்பின்னர், படை குவிப்பை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சீனா எச்சரிக்கை செய்தது. இதனை பொருட்படுத்தாத மத்திய அரசு, எல்லையில் நீண்ட காலத்திற்கு ராணுவம் முகாமிட உத்தரவிட்டது.
அதற்கான தளவாடங்கள், போர்க்கருவிகள், உள்ளிட்டவை டோகா லா எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சுமார் ஒரு மாத காலமாக இந்தியா – சீனா இடையே எல்லை பதற்றம் காணப்படுகிறது. ஜி-20 மாநாடு ஜெர்மனியில் கடந்த 7-ந்தேதி நடந்தபோது, அதில் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் இரு தலைவர்களும் சந்தித்து பேசிக்கொள்ளவில்லை..
இதுஒரும் இருக்க காஷ்மீரில் கடந்த 4 மாதங்களாக பதற்றம் நீடித்து வருகிறது. இங்கு கடந்த ஆண்டு ஜூலை 8-ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக புல்வாமா, குல்காம், சோபியான் மற்றும் அனந்த்நாக் ஆகிய 4 மாவட்டங்களில் பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் பொதுமக்கள் 60 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள் போலீஸ் தரப்பில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 9-ந்தேதி நகர் மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் வரலாறு காணாத அளவில் வாக்கு எண்ணிக்கை 7 சதவீதமாக சரிந்தது. கடந்த திங்களன்று அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள் 6 பேர் உள்பட மொத்தம் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். சீனாவுடனான எல்லை மோதல், காஷ்மீர் பதற்றம் ஆகிய 2 பிரச்னைகள் குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சிக்கிமில் சீனா அத்துமீறி வருகிறது.
அதனைப் பார்த்துக் கொண்டு மோடி அமைதியாக உள்ளார் என்று விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கான சீன தூதரையும் ராகுல் சந்தித்து பேசியுள்ளார். காஷ்மீர் பிரச்னை குறித்து விமர்சித்துள்ள அவர், பிரதமர் மோடியின் தவறான கொள்கைகளால்தான் காஷ்மீரில் தீவிரவாதிகள் உருவாக்கப்படுகின்றனர். அங்கு கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் பிடிபி கட்சியும் பாஜகவும் அரசியல் ஆதாய நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இதனால் அப்பாவி மக்கள் உயிரிழக்கிறார்கள் என்றார். இந்த நிலையில் அடுத்த வாரம் திங்கள்று நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அப்போது சீனா மற்றும் காஷ்மீர் விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் எதிர்க்கட்சிகளை இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது, சீனா, காஷ்மீர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும் இந்த இரு விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ராஜ்நாத்தும், சுஷ்மாவும் கோரவுள்ளனர்.