1962 போரில் விமானப்படையை நிலைநிறுத்தாததால் இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்
1962ஆம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரில் விமானப்படையை ஈடுபடுத்த வேண்டாம் என அப்போதைய இந்திய அரசு முடிவு செய்ததாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்த தவறுக்கு இந்தியாவுக்கு பெரும் விலை கொடுக்க நேர்ந்ததாகவும், நிலத்தின் பெரும் பகுதியை இழக்க நேரிட்டதாகவும் நியூஸ்9 பிளஸ்-க்கு அளித்த பேட்டியில் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா இடையே 1962ஆம் ஆண்டில் நடந்த போர் குறித்து விரிவாக பேசிய அமைச்சர், இந்தப் போரில் ஏற்பட்ட தோல்வி ஒவ்வொரு இந்தியரையும் இன்னமும் வேதனைப்படுத்துகிறது என்றார். மேலும், இந்தியாவின் தோல்விக்கு அரசியல் தலைமையின் திறமையின்மையும், பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்தாததும்தான் காரணம். அரசியல் தலைமையின் தோல்வியால் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாக வேண்டியதாயிற்று என அவர் குற்றம் சாட்டினார்.
இராணுவம் நவீனப்படுத்தப்படவில்லை
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1962 வரை இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்படவில்லை என்று ராஜீவ் சந்திரசேகர் குற்றம் சாட்டினார். முழுமையாக தயாராக இருந்த ஒரு எதிரிக்கு (சீனா) எதிராக, ராணுவ வீரர்கள் பயிற்சியின்றியும், உயரமான மலைப்பாங்கான நிலப்பரப்பில் வாழ்வதற்கு ஏற்பவும் இல்லாமல் போருக்கு அனுப்பப்பட்டனர்.
பூரண மதுவிலக்கு: பீகாரில் அதிகரிக்கும் கள்ளச்சாராய மரணங்கள்!
சீனாவை கையாள்வதில் ஜவஹர்லால் நேரு தவறு செய்தார்
அரசியல் தோல்வியால் போரில் தோற்றுவிட்டோமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பண்டிட் ஜவஹர்லால் நேரு பல விஷயங்களில் பெரியவராக இருக்கலாம், ஆனால் அவர் சீனாவை கையாள்வதில் தவறு செய்துவிட்டார். 1962இல் நமக்கு தீங்கு விளைவித்த சீனாவை புரிந்து கொள்வதில் அரசியல் தலைமை தவறு செய்தது என்றார்.
இன்றைய இந்தியா 1962 காலத்திலிருந்து மிகவும் வித்தியாசமானது
இன்று நாம் வாழும் இந்தியா 1962 காலத்திலிருந்து மிகவும் வித்தியாசமானது. இன்றைய இந்தியாவில் நடக்காத இரண்டு விஷயங்கள் 1962 போரில் நடந்தன. சீனா இந்தியாவை அவமானப்படுத்தியது. 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலம் கைப்பற்றப்பட்டது. அதற்குப் பிறகு அதுபோன்று நடக்கவே இல்லை. அப்போரில் விமானப்படை அனுப்பப்படவில்லை. அது ஒரு பெரிய தவறு. அப்போது இந்திய விமானப்படை சீனாவை விட முன்னிலையில் இருந்தது. இங்கிருந்த அரசியல் தலைமைகள் சண்டை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சியது. 1962இல் இந்தியா நடந்துகொண்ட போல் தற்போது நடக்காது. இன்றைய இந்தியாவில் இது முடியாது என்றும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.