கொரோனா பாதிப்பு: உலகளவில் டாப் 10ல் நுழைந்த இந்தியா

By karthikeyan VFirst Published May 25, 2020, 6:57 PM IST
Highlights

கொரோனா பாதிப்பில் உலகளவில் முதல் 10 இடத்திற்குள் இந்தியா நுழைந்துவிட்டது. 
 

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் 55 லட்சத்திற்கும் அதிகமானோரை தாக்கியுள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக சுமார் 17 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புடன் தென் அமெரிக்க நாடான பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

ரஸ்யா, ஸ்பெய்ன், பிரிட்டன், இத்தாலி, ஃபிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ள நிலையில், துருக்கிக்கு அடுத்த 10வது இடத்தில் இந்தியா உள்ளது. 

இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த வியாழக்கிழமையிலிருந்து தினமும் 6000க்கும் அதிகமான பாதிப்பு உறுதியாகிறது.

மே 21 காலை 8 மணியிலிருந்து 22 காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 6088 பேருக்கும், மே 22-23க்கு இடையேயான 24 மணி நேரத்தில் 6654 பேருக்கும், அடுத்த 24 மணி நேரத்தில் 6767 பேருக்கும் தொற்று உறுதியான நிலையில், கடைசி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6977 பேருக்கு தொற்று உறுதியானதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 1,39,993ஆக அதிகரித்துள்ளது. 

இதையடுத்து ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புடன் இருந்த ஈரானை பின்னுக்குத்தள்ளி கொரோனா பாதிப்பு பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா. இந்தியாவிற்கு முந்தைய 9வது இடத்தில் இருக்கும் துருக்கியில் பாதிப்பு எண்ணிக்கை 1,57,000 ஆகும். 

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 3,041 பேருக்கு தொற்று உறுதியானது. அதேபோல தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிகபட்சமாக ஒரே நாளில் 805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் இதுவரை 4,039 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 58 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 

click me!