இனிமேல் புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற பேச்சுக்கே இடமில்ல.. யோகி ஆதித்யநாத்தின் அதிரடி நடவடிக்கை

By karthikeyan VFirst Published May 25, 2020, 4:55 PM IST
Highlights

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
 

கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டது புலம்பெயர் தொழிலாளர்கள் தான். பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மார்ச் 25ல் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து சுமார் ஒன்றரை மாதமாக வேலையும் வருமானமும் இல்லாமல் தவித்துவந்தனர். 

ஊரடங்கு அமலில் இருந்ததால் அவர்களால் சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். குடும்பங்களை சொந்த ஊரில் விட்டுவிட்டு பிழைப்புக்காக புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள், வருமானமும் இல்லாமல், குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடியாமல், குடும்பத்தை பார்க்கவும் முடியாமல் தவித்துவந்தனர். 

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம் அளிக்க அந்தந்த மாநில அரசுகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், அனைவருக்கும் அந்த உதவி போய் சேரவில்லை. அதுமட்டுமல்லாமல் பல புலம்பெயர் தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திணறினர். மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தபிறகு, சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுவருகின்றனர்.  இதற்கிடையே, பல மைல் கடந்து தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல முடிவெடுத்து நடந்து சென்றவர்கள் சிலர் ரயில் விபத்தில் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியது.

கொரோனா ஊரடங்கால் கடும் இன்னல்களை சந்தித்தது புலம்பெயர் தொழிலாளர்கள் தான். சொந்த ஊரையும் குடும்பத்தினரையும் உறவினர்களையும் பிரிந்து, வருமானம் இல்லாததால் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள். ஆனால் இப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பியனுப்பப்படுகின்றனர். 

சொந்த ஊர்களுக்கு அவர்கள் அனுப்பப்பட்டாலும், ஊரடங்கு முடிந்ததும், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை தேடி அவர்கள் மீண்டும் புலம்பெயர வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளனர். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாவட்டங்களில் கட்டிட தொழில் உள்ளிட்ட பல தொழில்களில் கூலி வேலை பார்த்தவர்கள். எனவே அவர்கள் மீண்டும் புலம்பெயர வேண்டிய அவசியம் உள்ளது. 

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை வைத்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் அரசியல் செய்துவரும் நிலையில், இந்தியாவில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அந்தந்த மாநிலங்களிலும் ஊர்களிலும் போதுமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருந்தால், புலம்பெயர வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்று காங்கிரஸ் கட்சியை மாயாவதி விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸின் அடிச்சுவட்டை பின்பற்றாமல், பாஜக அரசாவது, சொந்த ஊர்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் முதன்மை மாநிலமாக உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு அதிரடி முடிவை எடுத்து அறிவித்துள்ளார். அதன்படி, உத்தர பிரதேச அரசின் அனுமதி பெறாமல் உத்தர பிரதேச மாநிலத்தவர்களை வெளிமாநிலங்களில் பணியமர்த்தக்கூடாது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேசத்திற்கு திரும்பியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த மண்ணிலேயே வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கான நடவடிக்கையை எடுக்க ஒரு கமிஷனை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வெளிமாநிலங்கள், ஏதேனும் பணிகளுக்கு ஆட்கள் தேவையென்றால், உத்தர பிரதேச அரசின் அனுமதி பெறாமல் எங்கள் மாநிலத்திலிருந்து பணியாளர்களை அழைத்துச்செல்ல முடியாது. ஏனெனில் வெளிமாநிலங்களில், இங்கிருந்து போகும் தொழிலாளர்கள் சரியான முறையில் நடத்தப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

வெளிமாநிலங்கள், உத்தர பிரதேச அரசின் அனுமதி பெறாமல், தொழிலாளர்களை பணிகளுக்கு அழைத்து செல்ல முடியாது என்று தெரிவித்துள்ள யோகி ஆதித்யநாத், அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள், இதை நடைமுறைப்படுத்தும் முறை ஆகியவை குறித்து தெரிவிக்கவில்லை.

இந்த ஊரடங்கு காலத்தில், சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உத்தர பிரதேசத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு முடிந்தவரை சொந்த ஊர்களிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காகத்தான் கமிஷன் அமைக்கிறார் யோகி ஆதித்யநாத். மேலும் அனுமதி பெற்று வெளிமாநிலங்கள் அழைத்து செல்லும் தொழிலாளர்களூக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

சொந்த ஊருக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக, குறைந்தபட்சம் நடவடிக்கையாவது முன்னெடுத்துள்ள மாநிலம் உத்தர பிரதேசம் தான்; புலம்பெயர் தொழிலாளர்களின் நலனையும் மரியாதையையும் கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுத்த முதல் முதல்வர் யோகி தான்.

click me!