டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்: ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு

By SG BalanFirst Published Dec 10, 2023, 8:44 PM IST
Highlights

டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணங்களை ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கவில்லை.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் மீண்டும் டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை.

முன்னதாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் வரமுடியாத சூழ்நிலையில் இருந்ததால், கூட்டம் டிசம்பர் 6-ம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Latest Videos

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று டிசம்பர் 6ஆம் தேதி இந்தியா கூட்டணிக்  கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மூன்று மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில்,  இந்தக் கூட்டம் அறிவிக்கப்பட்டது.

பாஜகவுக்கு எதிரான 27 எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணியின் முந்தைய கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

நடைபெற இருக்கும் இரண்டு நாள் கூட்டத்தில் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. முந்தைய கூட்டங்களில் ஏற்கெனவே ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் நடந்த இரண்டாவது கூட்டத்தின்போது எதிர்க்கட்சி கூட்டணியின் பெயர் இந்தியா (INDIA) என்று அறிவிக்கப்பட்டது. 

இந்தக் கூட்டணியின் முதல் கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் நடத்தினார். வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்து போராட இந்தக் கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

click me!