இந்தியா கூட்டணி கட்சிகள் இந்துத்துவத்தையும், சனாதன தர்மத்தையும் அவமதித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்
ராஜஸ்தான் மாநிலத்துக்கு நடப்பாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள அம்மாநிலத்தில் பாஜக சார்பில் பரிவர்தன் யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துங்கார்பூரில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் சனாதன தர்மம் குறித்து பேசியது, இந்து மதத்தை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எப்படி வெறுக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது என்றார்.
இந்தியா கூட்டணியின் 2 பிரதான கட்சிகளான காங்கிரஸும், திமுகவும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த நாட்டின் கலாச்சாரத்தையும், இந்துத்துவத்தையும், சனாதன தர்மத்தையும் அவமதித்து வருகிறார்கள் என்றும் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
undefined
வாக்கு வங்கி அரசியலுக்காகவும், தங்களது திருப்திக்காகவும் இந்தியா கூட்டணி கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என தெரிவித்த அமித் ஷா, காந்தி குடும்பத்தால் மட்டுமே நாட்டை ஆள முடியும் என்ற அகங்காரமும், கர்வமும் காங்கிரஸுக்கு இருக்கிறது என்று சாடினார்.
லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பை விட தீவிர இந்து அமைப்புகள் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2010 ஆம் ஆண்டு கூறிய கருத்தை குறிப்பிட்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “லஷ்கர்-இ-தொய்பாவை விட இந்து அமைப்புகள் ஆபத்தானவை என்று ராகுல் கூறினார். நீங்கள் இந்து அமைப்புகளை லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஒப்பிட்டீர்கள், உங்கள் உள்துறை அமைச்சர் நாட்டில் 'இந்து பயங்கரவாதம்' இருப்பதாக கூறினார்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சனாதன தர்மம் மக்களின் இதயங்களை ஆளுகிறது. மோடி வெற்றி பெற்றால் சனாதனம் ஆட்சி வரும் என்கிறார்கள். மக்கள் இதயத்தை சனாதனம் ஆள்கிறது. அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா இயங்கும் என்று பிரதமர் மோடி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.” என்றார்.
சானாதனத்தை ஒழிக்க வேண்டும்: வலுக்கும் எதிர்ப்பு - உதயநிதி பதிலடி!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் தடுப்பதாக குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ராமர் பிறந்த இடத்தில் ஜனவரியில் பிரம்மாண்ட ராமர் கோயில் தயாராகிவிடும். இந்தியக் கூட்டணியால் அதைத் தடுக்க முடியாது. காங்கிரஸ் பல ஆண்டுகளாக அதைத் தடுத்து விட்டது.” என்றார்.
முன்னதாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “கொசுக்களால் கொரோனா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவது போல, பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்.” என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனால், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என நான் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை. சனாதன தர்மம் என்பது சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும்.” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.