ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, 207 ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டை வருகிற 9,10 ஆகிய தேதிகளில் இந்தியா நடத்த உள்ளது. இதனையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வகையில், டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் வடக்கு ரயில்வேயின் கீழ் டெல்லியில் இருந்து புறப்படும் மற்றும் டெல்லிக்கு வரும் 207 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
மேலும், டெல்லியில் இருந்து புறப்படும் மற்றும் டெல்லிக்கு வரும் 15 ரயில்களின் டெர்மினல்களையும் இந்திய ரயில்வே தற்காலிகமாக மாற்றியுள்ளது. 70 பயணிகள் ரயில்களுக்கு டெல்லிக்கு வெளியே வெவ்வேறு இடங்களில் கூடுதல் நிறுத்தங்களுக்கான அனுமதியையும் இந்திய ரயில்வே வழங்கியுள்ளது. அதேசமயம் 6 பயணிகள் ரயில்களின் வழித்தடங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
வடக்கு ரயில்வே 36 பயணிகள் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்படவுள்ளதாகவும் ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தக் விரைவு, டெல்லி பதன்கோட் விரைவு மற்றும் ஹரித்வார் டெல்லி விரைவு ரயில்கள் போன்ற முக்கியமான அஞ்சல் மற்றும் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்ட பட்டியலில் உள்ளன.
ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
ஜி20 தலைமை கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவின் கைகளுக்கு முதன்முறையாக வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, ஜி20 கூட்டங்களை நாடு முழுவதும் இந்தியா சிறப்பாக நடத்தி வருகிறது. ஜி20 உச்சி மாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற 9,10ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, உச்சி மாநாடு நடைபெறவுள்ள தலைநகர் டெல்லியில் உயர் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.