
பருத்தி, பருத்தி நூலிழை மற்றும் பருத்தி ஜவுளிகளுக்கு, 5 சதவீத, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விலை அதிகரிக்கும் என, இத்துறையினர் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
ஜி.எஸ்.டி., வரி
தற்போது, உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட, 16 வகையான வரி விகிதங்கள் அமலில் உள்ளன. இவ்வரிகளை நீக்கி, ஜி.எஸ்.டி., என்ற ஒரே வரி விதிப்பு திட்டம், நாடு முழுவதும், ஜூலை, 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
சுதந்திர இந்தியாவில், மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் இத்திட்டம், பல்வேறு பொருட்களின் விலை குறையவும், அதிகரிக்கவும் வழிவகுக்கும். இந்த வகையில், ஜி.எஸ்.டி.,யால், பருத்தி ஜவுளிகளின் விலை அதிகரிக்க உள்ளது. தற்போது, பருத்தி, பருத்தி நூலிழை மற்றும் துணிக்கு வரி கிடையாது. ஒருசில மாநில அரசுகள் மட்டும், 2 – 4 சதவீதம் மதிப்பு கூட்டு வரி விதிக்கின்றன. இந்நிலையில், ஜி.எஸ்.டி.,யில், பருத்தி, பருத்தி நூலிழை, துணி மற்றும் 1,000 ரூபாய்க்குள் உள்ள பருத்தி ஆயத்த ஆடைகள் ஆகியவற்றுக்கு, 5 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. 1,000 ரூபாய்க்கு மேற்பட்ட ஆடைகளுக்கு, 12 சதவீத வரி; செயற்கை நூலிழைக்கு, 18 சதவீத வரி; செயற்கை நூலிழை துணிக்கு, 5 சதவீத வரி என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாறுபட்ட வரி விதிப்பிற்கு, ஜவுளித் துறையில் ஆதரவும், அதிருப்தியும் நிலவுகிறது.
இது குறித்து இந்திய ஜவுளித் துறை தலைவர், ஜே.துளசிதரன் கூறியதாவது:
மதிப்பு கூட்டு வரி
‘‘புதிய வரி விதிப்பால், ஒட்டுமொத்த ஜவுளித் துறை பயன் பெறும்; ஆயத்த ஆடைகளின் விலை குறையும். இதனால், நுகர்வோர்கள் பயன்பெறுவர்,’’.
இவ்வாறு இந்திய ஜவுளித் துறை தலைவர், ஜே.துளசிதரன் தெரிவித்தார்.
தென்னிந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பின் தலைவர், எம்.செந்தில் குமார் கூறியதாவது:
‘‘கடந்த, 2004 முதல், பருத்தி ஜவுளிகள், பூஜ்ஜிய வரி விதிப்பின் கீழ் உள்ளன. மாநில அரசுகள் விரும்பினால், அவற்றுக்கு மதிப்பு கூட்டு வரி விதிக்கலாம். ஜி.எஸ்.டி.,யில் விதிக்கப்பட்டுள்ள, 5 சதவீத வரியால், அரசுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் கிடைக்கும்.
நுகர்வோருக்கு பாதிப்பு இல்லை
அத்துடன், மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளித் துறையில், அதிகமானோரை வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்து, சீரான வணிக நடைமுறைக்கு துணை புரியும். பிராண்டட் ஆடைகளுக்கு ஏற்கனவே, 12.5 சதவீத வரி விதிப்பு உள்ளதால், ஜி.எஸ்.டி.,யால், நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,’’
இவ்வாறு, தென்னிந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பின் தலைவர், எம்.செந்தில் குமார் கூறியுள்ளார்.
குழப்பம் ஏற்படும்:
விரும்பினால் மட்டுமே, வரி விதிக்கும் பிரிவில் இருந்து கட்டாய வரி முறைக்கு மாற்றியதன் மூலம், பருத்தி ஆடைகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இதனால், பருத்தி ஆடைகள் விலை உயரும்.
ஜி.எஸ்.டி.,யில், ஆயத்த ஆடைகள் பிரிவுக்கு, ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும். பல்வேறு வரி விகிதங்கள், வீண் குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.