
பாரதியஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நிறுத்தப்பட ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜுலை மாதம் முடிகிறது. இதனால் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும், ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் மும்முரத்தில் இருக்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான 16 எதிர்க்கட்சிகள் தரப்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், வேட்பாளர் குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
அதேசமயம், ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஜார்கண்ட் ஆளுநரும், ஒடிசாவைச் சேர்ந்தவருமான பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் முர்மு தேர்வு செய்ய ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் கூறப்பட்டன.
குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவடையும் காலம் நெருங்கிவரும் நிலையில், இன்னும் பா.ஜனதாவும், காங்கிரசும் தங்களின் வேட்பாளரை முடிவு செய்யவில்லை. பா.ஜனதா சார்பில் நிறுத்தப்படும் பொது வேட்பாளரை ஆதரிக்க காங்கிரஸ் தயாராக இருக்காது என்பதால் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகிறது.
இந்நிலையில், பா.ஜனதா கட்சி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக நாடுமுழுவதும் அறிந்த, அனைவருக்கும் பிடித்தமான இந்தி நடிகர் அமிதாப் பச்சனை நிறுத்தலாம் என ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதற்கு ஏற்றார்போல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று நடிகர்அமிதாப் பச்சனுக்கு திடீரென அழைப்பு விடுத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்று மோகன் பகவத் வீட்டுக்கு நேற்று அமிதாப் பச்சன் சென்றுள்ளார். அவரின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமிதாப் பச்சன், மோகன் பகவத்துடன் ஏராளமான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக மோகன் பகவத் நிறுத்தப்படுவது குறித்து அவரிடம் சமீபத்தில் நிருபர்கள் கேட்டபோது, அப்படி ஒன்றும் எண்ணமில்லை என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், திடீரென நடிகர் அமிதாப் பச்சனை அழைத்து விருந்து கொடுத்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என பா.ஜனதா கட்சி தீவிரமாக இருப்பதால், அதற்கு உகந்த நபராக அமிதாப் பச்சன் இருப்பார். அமிதாப் வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள் கூட ஆதரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற கணிப்பில் பா.ஜனதா கட்சி காய் நகர்த்தி வருகிறது