
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உணவுப் பழக்கவழக்கம் என்பது தனி நபர் விருப்பம் சார்ந்தது என தெரிவித்துள்ளார்.
கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல் படுத்த முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளன..இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததற்கு நாடு முழுவதும் கடும் எண்டனம் எழுந்துள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் அனைவரையும் சைவமாக மாற்றப் பார்க்கிறது என்றும், இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மந்திரி வெங்கய்யா நாயுடு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது , பா.ஜ.க மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என கூறினார்.
உணவு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. என்ன வகையான உணவை உண்ண வேண்டும் என்பது தனிநபரின் விருப்பம் சார்ந்தது. இன்று வரை எனக்கு அசைவ உணவுப் பழக்கமே உள்ளது. இதையெல்லாம் ஒரு பிரச்னையாக்கி செயல்படக் கூடாது” எனக் கூறினார்.
பா.ஜ.க அனைவரையும் சைவமாக மாற்றப் பார்க்கிறது என்றால், அசைவம் சாப்பிடும் என்னை மாநில பாஜக தலைவராக எப்படி வைத்திருக்க முடியும் எனவும் வெங்கய்யா நாயுடு கேள்வி எழுப்பினார்.