
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பாக ஒரு திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. இதில் மன்மோகன் வேடத்தில் பிரபல இந்தி நடிகர் அனுபம் கேர் நடிக்கிறார்.
சஞ்சய் பாரு
2004-ம் ஆண்டு மன்மோகன் பிரதமரான போது அவரது மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. அவர், 2008- ம் ஆண்டு வரை அப்பணியில் இருந்தார்.
அவர் மன்மோகன் சிங்குடன் பணியாற்றியது குறித்து, ‘ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ (சந்தர்ப்பவசமாக பிரதமரானவர்) என்ற புத்தகத்தை எழுதினார்.
திரைப்படம்
2014ம் ஆண்டு வெளியான இப்புத்தகம், அப்போது நடந்த மக்களவை தேர்தலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புத்தகத்தை வைத்து தற்போது திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இப்படம், 2018 ம் ஆண்டு வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர், சுனில் போரா. இயக்குனர் விஜய் ரத்னாகர் கத்தே.
அனுபம் கேர்
இதில் மன்மோகன்சிங் வேடத்தில் நடிப்பது குறித்து நடிகர் அனுபம் கேர் கூறுகையில், ‘‘சம கால வரலாற்றில் வாழும் ஒருவரின் வேடத்தை ஏற்று நடிப்பது சவாலான ஒன்று. இரண்டு தரப்பையும் ஒப்பிடுவதையும் தவிர்க்க முடியாது. எனினும், நான் சவால்களை விரும்புபவன். மன்மோகன் சிங்காக நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன்,'' என்றார்.