தெரு நாய் உதவியால் ராணுவமுகாமில் தற்கொலைப் படைத்தாக்குதல் முறியடிப்பு

First Published Jun 6, 2017, 7:13 PM IST
Highlights
the suicide attack must come as a fiasco


காஷ்மீரில் துணை ராணுவ படை (சி.ஆர்.பி.எப்.) முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலை முறியடிப்பதற்கு தெருநாய் ஒன்று உதவிய தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து, முகாம் காவலரான 25 வயது தினேஷ் ராஜா என்பவர் நிருபர்களிடம் கூறியதாவது-

‘‘சம்பல் பகுதியில் அமைந்திருந்த சிஆர்பிஎப் படையின் 45-வது பிரிவு வாயிலில் நான் பாதுகாப்புக்காக நின்றிருந்தேன். நூற்றுக்கணக்கான அதிகாரிகள் உள்ளே இருந்தனர்.

அப்போது அதிகாலை 3 மணிக்கு அங்கிருந்த தெரு நாய் ஒன்று பலமாகக் குரைக்க ஆரம்பித்தது. சாலையை ஒட்டி அமைந்திருந்த புதர்களில் சந்தேகப்படும்படியான அசைவுகளை அது பார்த்திருக்கக் கூடும்.

நாயின் குரைப்பை கேட்டதும், மறைந்து இருந்தவர்கள் சுட ஆரம்பித்தனர். இதனால் தீவிரவாதிகள் பயந்துவிட்டதை உணர்ந்தோம். புதர்களுக்குள் மறைந்திருந்த இருவர் மீதும் சுட்டேன்.

மணிக் கோபுரத்தைக் காவல் காத்துக்கொண்டிருந்த என்னுடைய சக ஊழியர் பிரபுல்லா குமாரும் அவர்களை நோக்கிச் சுட்டார். முதல் ரவுண்டின் முடிவில் 2 தீவிரவாதிகள் காயமடைந்தனர்.

ஆனால் தற்கொலைப்படைத் தாக்குதல் எண்ணத்தோடு அவர்கள் வந்ததால், அவர்கள் பின்வாங்காமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். முடிவில் அவர்கள் கொல்லப்பட்டனர்'' என்றார்.

சி.ஆர்.பி.எப். கமாண்டர் இக்பால் அகமது தாக்குதல் பற்றி கூறும்போது, ‘‘ஒரு மணி நேரத்துக்கும் மேலாக என்கவுன்ட்டர் நீடித்தது. தாக்குதல் நடைபெறும்போது எதிர்பாராத விதமாக மின்சாரமும் போய்விட்டது. அப்போது மற்ற இரு தீவிரவாதிகளும் முகாமை நோக்கிச் சுடத் தயாராகி விட்டனர்.

மின்தடையை சமாளிக்க நாங்கள் நெருப்பைப் பற்ற வைத்து வெளிச்சத்தை பரப்பச் செய்தோம். அதன்மூலம் இருட்டில் தீவிரவாதிகள் தப்பிச் சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்'' என்றார்.

எதிர்த் தாக்குதலை முறியடித்தவர்களில் ஒருவரான பீகாரைச் சேர்ந்த குமார் (25) பேசும்போது, ''நான்கரை வருடங்களாக இந்த முகாமில் இருக்கிறேன். சம்பவம் நடந்த அன்று தீவிரவாதிகள் 40, 50 மீட்டர்கள் தொலைவில் இருந்தனர்.

காயமடைந்த தீவிரவாதிகள் நம்மைத் தாக்க அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் கொல்லப்படும் வரை சுட்டுக்கொண்டே இருந்தேன்'' என்றார்.

click me!