பாரதம் என்ற பெயரில் காங்கிரஸுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அதற்கு அவர்கள்தான் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு இந்தியா என பெயரிட்டுள்ளது. அதுமுதலே, இந்தியாவை பாரதம் என அழைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதனிடையே, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டை பாரதம் என்று குறிப்பிடும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஜி20 மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் 'பாரத ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜி20 மாநாட்டையொட்டி, செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 8 மணியளவில் இரவு விருந்து நடைபெறவுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், பாரத ஜனாதிபதி என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற அழைப்பிதழ்களில் ராஷ்டிரபதி பவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
undefined
ஜெயலலிதா மரண வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
இந்த பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா என்றிருக்கும் அரசியலமைப்பை சுட்டிக்காட்டி, அதன் மீதான தாக்குதல் இது என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “ராஷ்டிரபதி பவன் செப்டம்பர் 9 ஆம் தேதி G20 இரவு விருந்துக்கு வழக்கமான 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' என்ற பெயரில் அழைப்பை அனுப்பியுள்ளது. மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா என்றிருக்கும் அரசியலமைப்பின் 1ஆவது பிரிவு பாரதம் என மாற்றப்பட கூடும். இது மாநிலங்களின் ஒன்றியத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷின் இந்த கருத்துக்கு மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு எல்லாவற்றிலும் பிரச்சனை இருக்கிறது. அதுகுறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நான் ஒரு 'பாரதவாசி', என் நாட்டின் பெயர் 'பாரதம்', எப்போதும் 'பாரதமாக' இருக்கும். காங்கிரசுக்கு இதில் ஏதாவது பிரச்சனை என்றால், அதற்கு அவர்கள்தான் மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.