உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன்.. லண்டனுக்குக் குடியேறும் தகவலை அடியோடு மறுத்த முகேஷ் அம்பானி.!

By Asianet TamilFirst Published Nov 6, 2021, 10:07 AM IST
Highlights

பிரிட்டனில் கையகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் முதன்மையாக கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துக்கொள்கிறது.

இந்தியாவின் பெரும் பணக்காரரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி லண்டனில் குடியேற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி மும்பையில் வசித்து வருகிறார்.  இந்தியாவில் மட்டுமல்லாமல், பல நாடுகளிலும் தனது தொழிலை விரிவுப்படுத்தி தொழில், வர்த்தகத்தில் முன்னணியில் இருந்து வருகிறார். இந்நிலையில் முகேஷ் அம்பானி லண்டனில் குடியேற  திட்டமிட்டுள்ளதாக ‘மிட் டே’  பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது. ஏற்கெனவே மும்பையில் ஆன்டலியாவில் உலகிலேயே அதிக விலையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை முகேஷ் அம்பானி கட்டியிருந்தார். அந்த வீட்டில்தான் குடும்பத்தினரும் அவர் வசித்து வருகிறார். 

இந்நிலையில்தான் முகேஷ் அம்பானி லண்டனுக்கு மாறும் தகவல் வெளியானது. பிரிட்டனில் பக்கிங்ஹாம் ஹையர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோக் பார்க் மாளிகையை ரூ.592 கோடிக்கு அவர் வாங்கியுள்ளார் என்றும் அந்தக் கட்டத்தில் 49 படுக்கையறைகள், பிரம்மாண்ட லிவிங் ஏறியா கூடிய வசதி அந்த மாளிகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்தக் குடியிருப்புப் பகுதியில் பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டு வருவதுடன், அங்கு அவரது குடும்பத்திற்கான பிரத்யேக மினி மருத்துவமனை அமைக்கப்பட்டு வருவதாக மிட் டே செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. வரும் ஏப்ரலில் ஸ்டோன் பார்க் மாளிகைக்கு முகேஷ் அம்பானி குடும்பத்தினர் குடியேறுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. 

மேலும் தீபாவளி பண்டிகையை எப்போதும் தன்னுடைய வீட்டில்தான் முகேஷ் அம்பானி கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த முறை ஸ்டோக் பார்க் மாளிகையில் கொண்டாடியதால், அவர் வீடு மாறுவது உறுதி என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தகவல்களை அதிரடியாக மறுத்திருக்கிறார் ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டன் அல்லது உலகில் வேறு எங்கும் இடம்பெயரவோ அல்லது வசிக்கவோ எந்தத் திட்டமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறது.

பிரிட்டனில் கையகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் முதன்மையாக கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துக்கொள்கிறது. இந்த கையகப்படுத்தல் குழுமத்தின் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் வணிகத்தைச் சேர்ந்ததாக இருக்கும். அதே நேரத்தில், இது இந்தியாவின் புகழ்பெற்ற விருந்தோம்பல் துறையின் தடத்தை உலகளவில் விரிவுபடுத்தும் திட்டம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!