
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரை கோவர்த்தன் பூஜைக்காக சாட்டையால் ஒரு நபர் அடித்து தள்ளியிருக்கிறார்.
நாட்டில் சமயங்கள் பல விதம்.. சடங்குகளும் பலவிதம்… ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றபடி, சடங்குகளும் அதற்கான காரணங்களும் வேறு விதமாக இருக்கும்.
அதிலும் தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் சமய,சடங்குகள் ஆச்சர்யம் தருவதாக அமைந்திருக்கும். கோயில்களில் பூஜைகள், வீடுகளில் நடத்தப்படும் பூஜைகள் என பல வித்தியாசங்கள் காணப்படும். பூஜைகளில் மட்டும் அல்ல… பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி, நாய்க்கடி என்றாலும் சில மாநிலங்களில் பூஜைகள் கன ஜரூராக இருக்கும்.
கல்யாணத்தின் போது நடத்தப்படும் சடங்குகள், நடைமுறைகள் நமக்கு வித்தியாசமானதாக காணப்படும். இது தவிர, கால்நடைகளை அவர்கள் மதிக்கும் விதமே தனி.
குறிப்பாக, அரியானா, பஞ்சாப், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கால்நடைகள் பராமரிப்பில் மக்கள் அதிக கவனம் காட்டுவார். கோமாதா பூஜைகளை சிறப்பாக நடத்தி மகிழ்வர்.
அப்படி நடத்தப்பட்ட பூஜை ஒன்றில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு சாட்டை அடி விழுந்தது என்று சொன்னால் எப்படி இருக்கும். வடமாநிலங்களில் கோவர்த்தன் பூஜை என்பது மிகவும் பிரபலம். பாவம் ஒழிந்து நாட்டு மக்களுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் ஒரு சடங்கு.
இந்த சடங்கானது உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஏக பிரசித்தம். பீகார், சத்திஸ்கர் மாநிலத்திலும் இந்த பூஜைகள் நடத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர்.
அப்படித்தான் சத்திஸ்கர் மாநிலத்தில் கோவர்த்தன் பூஜை நடத்தப்பட்டது. மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்ட இந்த பூஜையில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கலந்து கொண்டார்.
துர்க் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கோவர்த்தன் பூஜையில் பாகல் பங்கேற்றார். அவரது வருகையால் அங்கு இருந்த மக்கள் மகிழ்ந்தனர்.
கோவர்த்தன் பூஜையில் சடங்காக சாட்டையடி நிகழ்வு நடத்தப்பட்டது. பூஜையில் முதலமைச்சருக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டது. சுற்றிலும் ஏராளமான மக்கள் திரண்டிருக்க ஒருவர் கையில் சாட்டையும் அங்கு வந்தார்.
அவருக்கு எதிராக நின்ற முதலமைச்சர் பாகல் தமது வலது கையை நேராக நீட்டினார். அவ்வளவு தான்… அடுத்த விநாடியே சுளீர்,சுளீர் என்ற சத்தம் எழுந்தது. படு ஆவேசம் காட்டிய ஒரு நபர் சாட்டையுடன் வந்து, முதலமைச்சரை அடி, அடியென்று அடித்தார்.
தமது வலது கையில் 1….2….3… என சாட்டையடிகள் விழுந்தன. 8வது சாட்டை அடியின் போது தமது கையை கீழே இறக்கி போதும் என்கிறார் முதல்வர் பூபேஷ் பாகல். ஒவ்வொரு அடியின் போதும், அங்கு சுற்றியிருக்கும் ஏராளமான மக்கள் ஆரவாரம் செய்து கரவொலி எழுப்பினர்.
மாநில வளர்ச்சிக்கு சாட்டையடி வாங்கியதாக தமது டுவிட்டரில் இது தொடர்பான வீடியோவையும் பூபேஷ் பாகல் வெளியிட்டு இருக்கிறார். இந்த சடங்கு மத்திய பிரதேச மாநிலத்திலும் நடைபெற்றது.
அம்மாநிலத்தில் உள்ள உஜ்ஜன் என்ற பகுதியில் கோவர்த்தன் பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். பின்னர் மரக்கன்றுகளை அவர் நட்டார். இது தொடர்பான போட்டோக்களையும் சவுகான் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.