தன்னை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் வயநாடு மக்களுக்காக உழைப்பேன் என்று ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.
தன்னை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் வயநாடு மக்களுக்காக உழைப்பேன் என்று ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார். தகுதி இழப்புக்குப் பின்னர் வயநாடு வந்திருக்கும் ராகுல்காந்தி அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வயநாடு மக்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் மக்களும் சுதந்திரமான நாட்டில் வசிக்க விரும்புகின்றனர். நாட்டில் எத்தனையோ பேர் வீடில்லாமல் இருக்கிறார்கள், அவர்களில் நானும் ஒருவன்.
இதையும் படிங்க: தகுதி இழப்புக்குப் பின்னர் முதன் முறையாக வயநாட்டில் ராகுல் காந்தி ரோடு ஷோ!!
எனக்கு எதிராக எது நடந்தாலும், நான் நானாகவே இருப்பேன். வயநாடு எம்பியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வயநாடு மக்களுக்காக நான் போராடுவேன். என்னை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் வயநாடு மக்களுக்காக உழைப்பேன். எம்பி என்பது வெறும் பதவி. பாஜக எனது பதவி, வீடு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம், சிறையில் அடைக்கலாம், ஆனால் வயநாட்டு மக்களுடனான எனது உறவை பறிக்க முடியாது. வெள்ளம் வந்தபோது வயநாட்டில் நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதையும் படிங்க: விவசாயியை திருமணம் செஞ்சுக்கர பெண்களுக்கு ரூ.2 லட்சம்... மதசார்பற்ற ஜனதா தளம் வாக்குறுதி!!
எனது வீட்டை பாஜக அரசு எடுத்துக் கொண்டாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். என் வீட்டை அவர்கள் எடுத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த வீட்டில் எனக்கு திருப்தி இல்லை. பாஜக மக்களை பிளவுபடுத்துகிறது, மக்களிடையே மோதலை உருவாக்குகிறது. ஒவ்வொரு சிறிய சமூகத்தினரையும், மதத்தினரையும் நான் மதிப்பேன். தற்போது நடப்பது இருவித சமூக கண்ணோட்டங்களுக்கு இடையிலான மோதலாகும். என் வீட்டுக்கு போலீசை அனுப்பி என்னை பயமுறுத்த நினைக்கிறார்கள். பாஜகவை கண்டு ஒருபோதும் பயம் கொள்ள மாட்டேன் என்று தெரிவித்தார்.