மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சைக்குரிய வகையில் சைகை காட்டி பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்
இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் பீகார் மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அம்மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.10%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36%, பட்டியலினத்தவர் 19.7%, பழங்குடியினர் 1.70%, இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பினர் 15.50% இருப்பது தெரியவந்துள்ளது.
பீகார் அரசின் இந்த செயலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பாக பேசி அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் சர்ச்சையில் சிக்கினார். பீகார் சட்டமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரில், சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்த விரிவான அறிக்கையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தாக்கல் செய்தார்.
மனிதக் கடத்தல்: என்.ஐ.ஏ. சோதனை - மியான்மர் நாட்டை சேர்ந்தவர் கைது!
அப்போது பேசிய அவர், “பீகாரில் கருத்தரித்தல் விகிதம் 4.3 சதவிகிதத்தில் இருந்து 2. 9 சதவிகிதமாக குறைந்துள்ளது. விரைவில் அது 2ஆக குறையும்.” என்றார். “மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு இளம் தலைமுறை பெண்களிடம் பாலியல் குறித்த விழிப்புணர்வு இருப்பதே காரணம். கணவனின் செயல்கள் அதிக பிறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கின்றன. கல்வியறிவு பெற்ற பெண் இதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை நன்கு அறிவாள். இந்தக் காரணங்களினால் குழந்தை பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது.” என்று அவர் விளக்கினார்.
இதுபோன்று, பேசியபோது சில சைகைகளையும் அவர் காட்டினார். இது அவையில் இருந்த பெண்களை முகம் சுழிக்க செய்தது. இதையடுத்து, நிதிஷ்குமாரின் பேச்சு தரக்குறைவானதாக இருந்ததகாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமது பேச்சுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரியுள்ளார். நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவைக்கு வரும் போது பிரதான நுழைவாயிலில் நின்று பாஜக உறுப்பினர்கள் அவரைத் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து நேராக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எனது வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமில்லை. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தியுள்ளேன். பெண்களுக்கான அதிகாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக நான் எப்போதும் துணை நின்றுள்ளேன்.” என்றார்.