
கொல்கத்தாவில் உள்ள சேத்லா பகுதியை சேர்ந்தவர் சுராஜித்பால். இவரது மனைவி தும்பா பால் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார்.
தும்பாபால் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருந்து வந்தார். எப்போதுமே செல்போனில் வாட்ஸ்-அப், டிவிட்டர், முகநூல் என யாருடனாவது தொடர்பில் இருந்து கொண்டிருந்தார்.
இதை பலமுறை சுராஜித்பால் பலமுறை கண்டித்தும் இருக்கிறார். ஆனாலும், தும்பாபாலால் அதை கண்டுகொள்ளாமல் மூழ்கிக் கிடந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ௨௫ஆம் தேதி மாலை வீட்டில் சமைக்காமல் வாட்ஸ்-அப்பில் நண்பர்களுடன் சாட் செய்துகொண்டிருந்திருக்கிறார்.
இதைப்பார்த்த சுராஜித்பாலுக்கு கடுமையான கோபம் வந்துள்ளது. அவர் மனைவியை திரும்பவும் எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கணவர் சுராஜித்பால் சமயலறையில் இருந்த காய் வெட்டும் கத்தியை எடுத்து தலையிலும், உடலிலும் பல இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். ஆனாலும் தும்பாபால் உயிர் போகவில்லை. இதனால் துணியை எடுத்து வந்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் சுராஜித்பால் தற்கொலை செய்வதற்காக தன் கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டார். ரத்தம் வெளியேறினாலும் அவருக்கு எதுவும் ஆகவில்லை. எனவே கையில் பேண்டேஜ் மூலம் கட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். கல்லூரிக்கு சென்றிருந்த மகன் வீடு திரும்பியபோது தாயார் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து தகவலை அறிந்த காவலர்கள் தும்பாபால் உடலை கைப்பற்று பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, வழக்குப்பதிவு செய்து சுராஜித்பாலை கைது செய்தனர்.