பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. பாஜக அரசின் கடைசி பட்ஜெட்!! வாக்காளர்களை கவர திட்டம்

First Published Jan 29, 2018, 9:48 AM IST
Highlights
parliament budget session starting today


இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதிக்கும் பிரச்னைகள், மசோதாக்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டில் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான கடைசி பட்ஜெட் இதுதான். எனவே, வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்வு உட்பட வாக்காளர்களைக் கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என கருதப்படுகிறது. மேலும் இந்தக் கூட்டத் தொடரில் உடனடி முத்தலாக் தடை மசோதா மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை கவர திட்டமிட்டுள்ளது. அதேநேரம், விவசாயிகள் பிரச்னை, அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான புகார் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய அரசு சார்பில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் விவகாரம், விவசாயிகள் பிரச்னைகள் உள்ளிட்ட விவகாரங்களை பாராளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
 

click me!