ரயில் தடம் புரண்டு இருந்தால் தவறு செய்த ஊழியர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.
கோரமண்டல் ரயில் மீது ஹவுரா ரயில் மோதி இருப்பது பெரிய அளவில் மக்களிடையே சர்ச்சையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை நடக்காத கோர விபத்தாக அமைந்துள்ளது. இந்த விபத்து நடந்தபோது, தண்டவாளத்தில் தடம் புரண்டு கிடந்த ரயிலின் மீது ஹவுரா ரயில் மோதி இருக்கிறது. இவற்றின் மீது சரக்கு ரயில் மோதி இருக்கிறது. அப்படித்தான் இப்போது வரை புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
ஒரே தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் தடம் புரண்டு கிடக்கும் செய்தி எப்படி ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் செல்லாமல் இருக்கும். ஏன் சிக்னல் கொடுக்கவில்லை. தற்போது ஆப் மூலம் ரயில் எங்கே வந்து கொண்டு இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. அப்படி இருக்கும்போது எங்கே தவறு நடந்தது? எப்படி ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வர முடியும். எவ்வளவு தொலைவில் வந்தாலும், தடம் புரண்டு கிடப்பது ரயில் ஓட்டுனருக்கு தெரிந்தே இருக்கும். அப்படி இருக்கும்போது ஏன் ரயிலை நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
தடம் புரண்ட ரயில் மீது மற்றொரு ரயில் மோதுவது என்பது நடக்கக் கூடாத சம்பவம் என்று பலரும் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். தடம் புரள்வது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. சமூக விரோதிகளால் தடம் புரள்வது, தண்டவாளத்தில் எதாவது பெரிய அளவில் கோளாறு இருக்கும்போது தடம் புரளலாம். ஆனால், ஒரே தண்டவாளத்தில் எப்படி இரண்டு ரயில்கள் வந்து இருக்க முடியும், தடம் புரண்ட ரயிலின் மீது மற்றொரு ரயில் மோத முடியும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
உயர் தொழில்நுட்ப காலத்தில் இதுபோன்ற ரயில் விபத்துக்கள் நடப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கன்னியாகுமரியில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலின் ஓட்டுநர் சுதாரித்து, தண்டவாளத்தில் எதோ இருப்பதைப் பார்த்து ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்தார். ஏன் இதுபோன்று ஹவுரா ரயில் ஓட்டுநர் சுதாரிக்கவில்லை, எங்கே தவறு நடந்தது? போன்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்று நெட்டிசன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இன்னும் ரயில்வேயில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறதா? தொழில்நுட்ப குறைபாடா? ஊழியர்களின் மெத்தனமா? போன்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும்.