Coromandel Train Accident : இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து : அடுக்கடுக்காக எழும் கேள்விகள்..

By Ramya sFirst Published Jun 3, 2023, 10:07 AM IST
Highlights

ஒடிசாவின் பாலசோரில் வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் இந்த ரயிலின் சுமார் 12 பெட்டிகள் சரிந்து, எதிர் தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து எதிரே வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மோதியது. இதில் பெங்களூரு- ஹவுரா சூப்பர்பாஸ்ட் ரயிலின் 3 முதல் 4 பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.

இந்த 2 பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் விபத்துக்குள்ளானது. இப்படி 3 ரயில்கள் விபத்தில் சிக்கியதால் ரயில் விபத்து வரலாற்றில் பதிவான மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த பயங்கர ரயில் விபத்தில் 238 பேர் உயிரிழந்ததாக இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிகை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எனினும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அடுத்தடுத்து 3 ரயில்கள் சிக்கியது எப்படி என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. முதலில் ஒரு ரயில் தடம்புரண்ட நிலையில், அந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதியது எப்படி? ரயில் தடம்புரண்டது பற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லையா? இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? 2 ரயில்கள் அடுத்தடுத்த விபத்துக்குள்ளான பிறகும் 3-வதாக சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியது எப்படி என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. 

இதையும் படிங்க : கோரமண்டல் விரைவு ரயில் விபத்து.. தடம் புரண்ட ரயில் பெட்டிகள் எவை? வெளியான அதிர்ச்சி தகவல்.!

இது சென்னை வந்துகொண்டிருந்த ரயில் என்பதால், தமிழர்களும் இந்த ரயில் பயணித்திருக்கக்கூடும் என்பதால் தமிழக அரசும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடங்கிய குழு புறப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 35 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பாலசோரில் உள்ள ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

மீட்புப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான மருத்துவ உதவியை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறிய அவர், ரயில் பாதுகாப்பு ஆணையர் சுதந்திரமான விசாரணை நடத்துவார் என்றும் கூறினார்.  மேலும் “ இது ஒரு பெரிய சோகமான விபத்து. ரயில்வே, என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் மாநில அரசு ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. சிறந்த மருத்துவ வசதிகள் செய்து தரப்படும். இழப்பீடு தொகை நேற்று அறிவிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்கு பின், சீரமைப்பு பணிகள் துவங்கும். விரிவான உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். இந்த துயரச் செய்தி தனது அமைச்சுக்கு கிடைத்த சிறிது நேரத்திலேயே மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டது” என்று அமைச்சர் தெரிவித்தார். தென்கிழக்கு வட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.. 43 ரயில்களின் சேவை ரத்து.. 38 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்.!

click me!