இரண்டு ஆண்டுகளில் 15,04,012 மின்சார வாகனங்கள் பதிவு: மத்திய அரசு தகவல்!

By Manikanda Prabu  |  First Published Dec 20, 2023, 3:21 PM IST

இரண்டு ஆண்டுகளில் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் மொத்தம் 15,04,012 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது


நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் மின்சார வாகனங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கனரக தொழில்கள் துறை இணையமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில் கூறியிருப்பதாவது: “கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் மின்சார வாகனங்களின் விற்பனையில் எந்தச் சரிவும் இல்லை. மேலும், இ-வாகன் தளத்தில் (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்), பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்கள் குறித்த விவரங்கள், மாத வாரியாக இடம்பெற்றுள்ளன.

Latest Videos

undefined

நாட்டில் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்வது (ஃபேம் இந்தியா): ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 2019 ஏப்ரல் 01 முதல் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.10,000 கோடி நிதி ஆதரவுடன் அரசு அறிவித்தது.

வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிபாகத் தொழிலுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம்: ரூ.25,938 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் வாகன உற்பத்தித் துறைக்கான பி.எல்.ஐ திட்டத்திற்கு அரசு 2021, 15 செப்டம்பர்  அன்று ஒப்புதல் அளித்தது.  இந்தத் திட்டம் மின்சார வாகனங்களுக்கு 18% வரை ஊக்கத்தொகையை வழங்குகிறது.

ஃபாஸ்டேக்கில் தவறாக கழிக்கப்படும் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது?

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம், 'மேம்பட்ட வேதியியல் செல்கள் (ஏ.சி.சி) பேட்டரி சேமிப்புக்கான தேசிய திட்டம்': ரூ .18,100 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் நாட்டில் ஏ.சி.சி உற்பத்தி செய்வதற்கான பி.எல்.ஐ திட்டத்திற்கு அரசு 2021 மே 12 அன்று ஒப்புதல் அளித்தது. 50 கிலோவாட் திறன் கொண்ட போட்டித்திறன் மிக்க ஏ.சி.சி பேட்டரி உற்பத்தியை நாட்டில் நிறுவுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், 5 கிலோவாட் முக்கிய ஏ.சி.சி தொழில்நுட்பங்களும் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.

மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றிகள், மின்னேற்றி நிலையங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு 6,84,789 மின்சார வாகனங்களும், 2023ஆம் ஆண்டு 8,19,223 மின்சார வாகனங்களும் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.” இவ்வாறு அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!