காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை துணை சபாநாயகர் பதவிகள் எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
18-வது மக்களவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. பொதுவாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமனதாக போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுப்பது மரபு. இதனால் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதில்லை.
இந்த சூழலில் மக்களவை சபாநாயகர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை மத்திய அரசு நியமித்தது. அதன்படி ராஜ்நாத் சிங் நேற்றிரவு இந்தியா கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸின் வேணு கோபால், திமுகவின் டி.ஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது என்.டி.ஏ கூட்டணி தேர்வு செய்யும் வேட்பாளருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்தார். ஆனால் தங்களுக்கு துணை சபாநாயகர் பதவி கொடுத்தால் பாஜக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க தயார் என்று எதிர்க்கட்சிகள் தரப்பு கூறியது. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
இதையடுத்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, மத்திய அரசும், பிரதமர் மோடியும் எதிர்க்கட்சிகளை அவமதித்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு வராததால் முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது. என்.டி. ஏ தனது வேட்பாளராக பாஜக எம்பி ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பாக கொடிகுன்னில் சுரேஷும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக நாளை மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவை துணை சபாநாயகர் பதவியை கொடுக்க என்.டி.ஏ கூட்டணி முன் வராததால், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை துணை சபாநாயகர் பதவிகள் எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகள் காங்கிரஸ் கட்சியிடம் தான் உள்ளன. அதே போல் காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான தெலங்கானாவில் துணை சபாநாயகர் பதவி காலியாக உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் தமிழ்நாட்டில் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகள் திமுகவிடம் தான் உள்ளது. ஜே.எம்.எம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் ஜார்கண்டில் துணை சபாநாயகர் பதவி காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.