விசாரணை அமைப்புகளிடம் சிக்காமல் காரில் சுமார் 1300 கி.மீ பயணித்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஞ்சி வந்த தகவல் தெரியவந்துள்ளது
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அம்மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது, அதன்படி, கடந்த 20ஆம் தேதி முதல்முறையாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
அதன் பிறகு ஹேமந்த் சோரனிடம் விசாரிக்க மீண்டும் ஒரு புதிய சம்மன் அனுப்பப்பட்டது. அதில், இரண்டு தேதிகளில் ஒன்றை அவர் தேர்வு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜனவரி 29ஆம் தேதியை அவர் தேர்வு செய்துள்ளார். இதனிடையே, டெல்லி சென்ற ஹேமந்த் சோரனிடம் விசாரணை மேற்கொள்ள அன்றைய தினம் காலை 7 மணிக்கு அவரது டெல்லி இல்லத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
undefined
ஆனால், ஹேமந்த் சோரன் அங்கு இல்லை. வசந்த் விஹாரில் உள்ள அவரது அரசாங்க அலுவலகத்திலும் அவர் இல்லை. சுமார் 13 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து திரும்பினர். அதேசமயம், அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி ரூ.36 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகியன.
இதனிடையே, ஹேமந்த் சோரன் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகின. அவர் எங்கிருக்கிறார் என யாருக்குமே தெரியவில்லை. அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுக்கும் கூட அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. பிரச்சினைகளை தவிர்க்க மூத்த அதிகாரிகள் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விமான நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் வலை வீசி தேடினர். அமலாக்கத்துறை விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என்பதால், அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.
சீன ராணுவ வீரர்களை ஓட விட்ட இந்திய மேய்ச்சல்காரர்கள்!
தனி விமானத்தில் சனிக்கிழமை இரவு டெல்லி வந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் தனது வீட்டை விட்டு பதுங்கியபடி வெளியேறி, ஒரு சால்வையை மட்டும் சுற்றிக் கொண்டு கால்நடையாக புறப்பட்டு சென்றதாகவும் கூறப்பட்டது.
ஹேமந்த் சோரனை காணவில்லை என ஜார்கண்ட் மாநிலத்தில் போஸ்டர் ஒட்டிய எதிர்க்கட்சிகள், கைதுக்கு பயந்து எங்கோ ஓடிவிட்டார் என விமர்சித்தன. சுமார் 48 நேரம் தேசிய ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருந்த அவர், ராஞ்சியில் நேற்று நடந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ‘நான் உங்கள் இதயங்களில் இருக்கிறேன்’ என்றார்.
அதேசமயம், ஹேமந்த் சோரன் டெல்லிக்கு தனிப்பட்ட வேலையாக சென்று ராஞ்சி திரும்பியதாக அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் கூறியுள்ளனர். அவர் இல்லாத நேரத்தில் முதலமைச்சரின் வீட்டை சோதனையிட்டது அரசியலமைப்புக்கு விரோதமானது என அமலாக்கத்துறையை அவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
ஜார்கண்டின் அடுத்த முதல்வர்? யார் இந்த கல்பனா சோரன்?
மேலும், ஹேமந்த் சோரனின் பயண அட்டவணை மாறியதால், ஜனவரி 29ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 31ஆம் தேதி ஆஜராவதாக அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ராஞ்சியில் உள்ள வீட்டில் மதியம் 1 மணிக்கு அவர் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்றுக் கொண்டது. ஆனாலும், அவர்கள் டெல்லி வீட்டிற்கு சென்றுள்ளனர் எனவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சரி ஹேமந்த் சோரன் எங்கு சென்றார்?
ஹேமந்த் சோரன், டெல்லியில் இருந்து அடையாளம் தெரியாத காரில் புறப்பட்டு, ஊடகங்கள், அமலாக்கத்துறை அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத்தூவி சுங்கச்சாவடி கேமராக்களிலும் சிக்காமல் சுமார் 1300 கி.மீ. பயணித்து ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சி வந்ததாக தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஹேமந்த் சோரனை டெல்லிக்கு அழைத்து வந்த தனி விமானம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, அதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருந்தபோது, கார் மூலம் அவர் ராஞ்சி வந்தடைந்துள்ளார்.
அதேசமயம், ஜனவரி 31ஆம் தேதி ஆஜராவதாக அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, அந்த கோரிக்கையை அவர்களும் ஏற்றுக் கொண்ட பிறகு, ஜனவரி 29ஆம் தேதியே அவர்கள் வருவார்கள் என ஹேமந்த் சோரனுக்கு எப்படி தெரிந்தது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது என்கிறார்கள்.