ஜார்கண்டின் அடுத்த முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன்
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். அம்மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, அமலாக்கத்துறை பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், ஒரே ஒரு முறை மட்டுமே அவர் ஆஜராகி விளக்கம் அளித்துளார். இதையடுத்து அமலாக்கத்துறை அனுப்பிய அனைத்து சம்மன்களையும் அவர் நிராகரித்துள்ளார்.
இதனிடையே, டெல்லி சென்ற ஹேமந்த் சோரன் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே ராஞ்சியில் நடந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஹேமந்த் சோரன் கலந்து கொண்டார். அவரது மனைவை கல்பனா சோரனும் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில், ஹேமந்த் சோரன் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தெரிவித்தனர்.
மேலும், அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டால், அவரது மனைவி கல்பனா சோரன் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் (48) ராஞ்சியில் பிறந்தாலும் ஒடிசாவில் வளர்ந்தவர். 1976ஆம் ஆண்டு ராஞ்சியில் பிறந்த கல்பனா சோரன், ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, ஒடிசாவிலேயே அவர் வளர்ந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மயூர்பஞ்ச் நகரில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்து முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் : பிரதமர் மோடி உறுதி..
கல்பனா சோரன் பொறியியல் பட்டப்படிப்பை முடித்ததோடு எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டும் கல்பனா, சொந்தமாக பள்ளி நடத்துவதோடு இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஹேமந்த் சோரனை மணந்தார். கல்பனா - ஹேமந்த் சோரன் தம்பதிக்கு நிகில் மற்றும் அன்ஷ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஆண்டு வரை தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த கல்பனா சோரன், அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் வந்ததையடுத்து, அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அரசியல் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளாதால், ஒருவேளை கல்பனா சோரனுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தால், மாநிலத்தின் தற்போதைய சூழ்நிலையை இயல்பாகவே அவரால் கையாள முடியும் என பலரும் நம்புகிறார்கள்.
சீன ராணுவ வீரர்களை ஓட விட்ட இந்திய மேய்ச்சல்காரர்கள்!
1997ஆம் ஆண்டில் அப்போதைய பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அந்த சமயத்தில் பதவி விலகிய லாலு யாதவ், தனது மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சராக்கினார். ஆனாலும், அரசாங்கம் லாலுவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அந்த பாணியில் ஹேமந்த் சோரனும் தனது மனைவி கல்பனாவை முதல்வராக்க முயற்சித்து வருகிறார் என்கிறார்கள்.